6 மே, 2011

முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் இட்ட ஓலமே ஐ.நா.வின் அறிக்கை: த.தே.கூ

முள்ளிவாய்க்காலில் ஐயோ என தமிழர்கள் இட்ட ஓலமே ஐ.நா. அறிக்கையாக இன்று வெளிவந்துள்ளது. இவ்வாறான நிலையில் புதைகுழியில் இருக்கின்ற புலிகளின் சடலங்களை தோண்டியெடுத்து அரசாங்கம் அவசர காலச்சட்டத்தை நீடிக்க முயற்சிக்கின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

புதைகுழியில் இருக்கின்ற புலிகளை தோண்டியெடுத்து அவசரகால சட்டத்தை நீடித்துக் கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றது.

நாட்டில் நிலவுகின்ற பொருட்களின் விலை அதிகரிப்பு, வேலை வாய்ப்பின்மை போன்ற காரணங்கள் நாட்டில் மக்கள் புரட்சி வெடிக்கும் காரணங்களாக இருக்கின்றன. புரட்சி வெடித்தால் அரசாங்கம் 6 மாதங்களுக்கு கூட ஆட்சியில் இருக்க முடியாத நிலைமை ஏற்படும்.

இவ்வாறான நிலையில் ஐ.நா.வின் அறிக்கையை நாம் வரவேற்கின்றோம். அது வெறும் அறிக்கையல்ல. தமிழ் மக்கள் 60 வருடங்களாக அனுபவித்த அநீதிகள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கியதாகவே இந்த அறிக்கை இருக்கின்றது. இவற்றை கவனத்தில் கொண்டு இனியாவது நிரந்தர சமாதானத்தையும் தீர்வையும் காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல் ஆயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டு, பல் கோடி மதிப்புள்ள சொத்துக்களை இழந்தே இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. அதாவது முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் ஐயோ என்று இட்ட ஓலமே இன்று ஐ.நா அறிக்கையாக வெளிவந்துள்ளது.

கையொப்பங்களை திரட்டி, ஆர்ப்பாட்டங்களை நடத்துவதன் மூலம் இதற்கு பதிலளித்து விட முடியாது. கடந்த கால தவறுகளை திருத்தி கொண்டு தமிழ் சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

புலிகளின் ஆதரவாளர்கள் இருப்பதாக வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதில் எந்த பயனும் இல்லை. நிரந்தரமான சமாதானமும் தீர்வும் காணப்பட வேண்டும். தமிழ் மக்களின் கண்ணீரும் இரத்தமுமே இந்த அறிக்கையில் வெளிவந்துள்ளமையினால் அதனை வரவேற்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக