6 மே, 2011

பிரபாகரனை போன்று ஒஸாமாவின் மரணமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்: பிரதமர்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம்போல ஒஸாமாவின் மரணமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பிரபல்யமான நாடு எடுத்திருக்கும் நடவடிக்கை எமக்கு தைரியம் ஊட்டுகின்றது என்று பிரதமர் தி.மு.ஜயரட்ன தெரிவித்தார்.

இருதரப்பினரிடையே யுத்தம் இடம்பெறுகின்ற போது அதில் உயிரிழப்புகள் ஏற்படுவது வழமையானதொரு நிகழ்வு என்பதனால் அதனை கிளறிக் கொண்டிருக்காமல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டைக் கட்டியெழுப்ப உதவ வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நிபுணர் குழுவின் அறிக்கையை இந்த நாட்டு மக்கள் நிராகரித்து விட்டனர். இதற்கு சாட்சியாக மே தினத்தில் ஜனாதிபதியின் பின்னால் மக்கள் அணிதிரண்டிருந்தனர். நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. தலைவர் உட்பட பலர் இந்த அறிக்கையை ஏற்க முடியாது என பகிரங்கமாகவே அறிவித்து விட்டனர். எனினும் டொலருக்கு அடிமையானவர்கள் மட்டுமே இந்த அறிக்கையை வரவேற்கின்றனர். தாய்நாட்டை நேசித்தால் மட்டுமே வீட்டில் கூட பிரச்சினையின்றி இருக்க முடியும் இது டொலருக்கு அடிமையானவர்களுக்கு புரிவதேயில்லை.

ஒசாமா கொல்லப்பட்டு விட்டார் என்கின்றனர். இன்னும் சிலர் கொல்லப்படவில்லை என்கின்றனர். இது தொடர்பில் எமக்கு எதுவுமே தெரியாது என்றாலும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டமை உறுதி செய்யப்பட்டது போல ஒபாமாவின் மரணமும் உறுதி செய்யப்படல் வேண்டும்.

புலிகள் பற்றி பேசாமல் நாட்டின் பாதுகாப்பு குறித்து பேச முடியாது. புலிகளின் நடவடிக்கைகள் இலங்கையில் முடுக்கி விடப்பட்டாலும் வெளிநாடுகளில் இருப்பவர்களின் செயற்பாடுகள் தீவிரம் பெற்றுள்ளன. அங்கிருக்கின்ற புலனாய்வு பிரிவினர் மற்றும் ஆயுதப் பிரிவினருடன் சிலர் தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றனர்.

அவசரகாலச் சட்டத்திலுள்ள பல விதிகளை நாங்கள் நீக்கிவிட்டோம். நாட்டிற்கு எதிர்காலத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்ளக் கூடிய சில விதிகளைத் தவிர ஏனைய விதிகள் நீக்கப்பட்டு விட்டன. தற்போது அவசரகாலச் சட்டத்திலுள்ள விதிகள் பொதுமக்களுக்கு எவ்விதத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்த கூடியதல்ல என்பதனால் இத்தொடர்பில் அஞ்ச தேவையில்லை.

மோதல்கள் இடம்பெறும் போது உயிர் இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. எனினும் அதனை கிளறிக் கொண்டிருக்காமல் யுத்தத்தில் சேதமடைந்த நாட்டினை கட்டியெழுப்புவதற்கு உதவி செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக