6 மே, 2011

ஐக்கிய நாடுகள் சபை எமது அமைப்பு அறிக்கையை தெளிவுப்படுத்துவோம்: அரசாங்கம்




ஐக்கிய நாடுகள் சபை என்பது எமது அமைப்பாகும். அதன் செயலாளர் பான் கீ மூன் எமது செயலாளர் ஆவார். இந்நிலையில் தருஷ்மன் அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை, மனித உரிமைபேரவை, அணிசேரா நாடுகள் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச சமூகத்துக்கு நாங்கள் தெளிவுபடுத்துவோம். வெளிவிவகார அமைச்சர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்துவார் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

தருஷ்மன் அறிக்கையை முன் வைத்து நாங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளமாட்டோம். ஆனால் அந்த அறிக்கையை வைத்துக் கொண்டு எமக்கு எதிராக எதனையும் செய்ய முடியாது. இந்த விடயத்தில் எமக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு கிடைக்கும். அதற்கான இராஜதந்திர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றை இந்த இடத்தில் வெளிப்படுத்த முடியாது என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, டலஸ் அழகப்பெரும, நிமால் சிறிபால டி சில்வா ஆகியேக்ஷிர் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிடுகையில், வரலாற்று ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த மேதினக் கூட்டம் ஒன்றை நாங்கள் நடத்தியுள்ளோம். அரசாங்கம் எதிர்பார்த்ததை விட மக்கள் வெள்ளம் போன்று திரண்டு வந்தனர். முக்கியமாக வடக்கிலிருந்து 7000த்துக்கும் மேற்பட்ட மக்கள் எமது மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். எமது அரசாங்கத்தின் பலத்தை நாங்கள் அரசியல் ரீதியாக மற்றுமொருமுறை உலகத்துக்கு வெளிக்காட்டியுள்ளோம். இந்நிøலயில் ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டு வருகின்றன.

அதனால் நாங்கள் பெருமையோ அகங்காரமோ கொள்ளவில்லை. மாறாக எம்மை ஸ்திரப்படுத்திக் கொண்டும் மக்களின் ஜனநாயக மனித உரிமைகளை பாதுகாத்துக் கொண்டும் நாட்டை முன்னேற்றி வருகின்றோம். மேலும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் சர்வதேச சமூகத்தினை தெளிவுபடுத்துவோம். ஐக்கிய நாடுகள் சபை என்பது எமது அமைப்பாகும். அதன் செயலாளர் எமது செயலாளர் ஆவார். அந்த வகையில் தருஷ்மன் அறிக்கையானது தவறானது என்பதனை தெளிவுபடுத்துவோம்.

இந்த அறிக்கையை வைத்துக் கொண்டு சில சர்வதேச சக்திகள் எமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. ஆனால் எமது அரசாங்கம் அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொண்டு முன் செல்லும். இந்த நாட்டின் தலைவர்களில் அதிகளவில் சவால்களுக்கு முகம் கொடுத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான். பிரபாகரன் பிரச்சினை, யுத்தக் குற்றக் விடயம், அழுத்தங்கள் என பல சவால்களை எமது ஜனாதிபதி எதிர்கொண்டார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அக்ஷீமரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபேட் ஓ பிளேக் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு பேரவையின் தலைவராக வரப் போகின்றவர் ஆகியோரின் கருத்துக்களைப் பார்க்கும் போது நாம் மிகவும் பலமான இடத்தில் இருக்கின்றமை தெளிவாகின்றது என்றார்.

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிடுகையில், தருஷ்மன் அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தெளிவான பதிலை வெளியிட்டுள்ளார்.

தருஷ்மன் அறிக்கையானது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு ஆவணமல்ல. ஐ.நா. வின் பாதுகாப்பு சபை, மனித உரிமை பேரவை மற்றும் ஏனைய நிறுவனங்களினால் அந்த அறிக்கைக்கு அனுமதி கிடைக்கவில்லை. இது வெறுமனே பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்க நிறுவப்பட்ட குழுவாகும்.

ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் இந்தக் குழுவையும் அறிக்கையையும் ஏற்கவில்லை. இதன் பின்னர் ஒன்றும் செய்ய முடியாது என்று ஐ.நா. செயலாளரே கூறிவிட்டார். அதன் மூலம் இந்த ஆவணம் எந்த பலமும் அற்றது என்பது தெளிவாகின்றது. எனினும் இந்த அறிக்கை தொடர்பில் நாங்கள் ஆய்வு செய்து வருகின்றோம்.

ஆனால் இந்த அறிக்கையைக் காரணம் காட்டி நாங்கள் ஐ.நா. வுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள மாட்டோம். அவ்வாறு செய்ய முடியாது. காரணம் நாங்கள் ஐ.நா. வில் அங்கத்துவம் பெற்றுள்ளோம். ஆனால் எம்மை அசௌகரியப்படுத்த மேற்கொண்டுள்ள முயற்சிகளைத் தடுக்க எமக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகும். அதற்காக நாங்கள் இராஜதந்திர ரீதியில் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். ஐ.நா. பாதுகாப்பு சபை, மனித உரிமை பேரவை, அணிசேரா நாடுகள் அமைப்பு என்பன எமது தரப்பு நியாயத்தை புரிந்து கொண்டு எமக்கு உதவ தயாராக உள்ளன. அது எவ்வாறு என்று தற்போது கூற முடியாது. ஆனால் இராஜதந்திர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் எவரோ கூறியவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே தேவையான நேரத்தில் தேவையான பதிலை நாங்கள் வழங்குவோம்.

விரைவில் வெளிவிவகார அமைச்சர் வெளிநாடுகளுக்கு சென்று எமது நிலைப்பாடு தொடர்பில் தெளிவுபடுத்துவார். எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதிவரை அணி சேரா நாடுகளின் மாநாடு நடைபெறும். இந்தோனேசியாவில் நடைபெறும் இந்த மாநாட்டில் எமது நாட்டின் தூதுக்குழு கலந்து கொண்டு நிலைப்பாட்டை விளக்கும். எனவே நாட்டு மக்கள் எக்காரணம் கொண்டும் பயப்பட வேண்டாம். எமது முன்னிலையில் ஒரு சவால் உள்ளது. அதனை எதிர்கொள்ள நாம் தயக்ஷிராக இருக்கின்றோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவாலை முறியடித்து முன்னேறுவார் என்றார்.

அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிடுகையில், புலிகள் ஒழுக்கமுள்ள அமைப்பு என தருஷ்மன் அறிக்கை சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆனால் புலிகள் சிறுவர்களை படையில் சேர்த்ததாக ஐ.நா. வின் சகோதர நிறுவனமான யுனிசெப் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளது. அப்படியானால் தருஷ்மன் குழு யுனிசெப் அறிக்கைகளை வாசித்ததில்லையா? இது தொடர்பில் கவலையடைகின்றோம்.

பின்லாடனை பயங்கரவாதி எனக் கூறும் மேற்கு, புலிகளை விடுதலை அமைப்பு என குறிப்பிட்டுள்ளது.

புலிகளுக்கு முப்படைகள் இருந்தன. அல் கொய்தாவுக்கு அவ்வாறு இருக்கவில்லை. புலிகளுக்கு தனி நிலப்பகுதி இருந்தது. ஆனால் அல் கொய்தாவுக்கு தனி நிலம் இருக்கவில்லை. அல் கொய்தா இரண்டு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஆனால் புலிகள் இயக்கம் சுமார் 300 தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்த வந்த 600 புலிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் புலிகள் அரச தலைவர்கள் ?????படுகொலை செய்துள்ளனர். அந்த வகையில் புலிகள் மிலேச்சத்தனமான அமைப்பாகும். இவ்வாறான அமைப்பை எவ்வாறு ஒழுக்கமுள்ள அமைப்பு என்று கூறுவது? இதேவேளை, ஐ.நா. சாசனத்தில் பயங்கரவாதம் என்பதற்கு சரியான வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை. அதாவது மேற்கு நாடுகளுக்கு எதிராக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் அதனை பயங்கரவாதம் என்றும் இப்பகுதி நாடுகளில் ஏதாவது பயங்கரவாத பிரச்சினை ஏற்பட்டால் அதனை புரட்சி என்றும் மேற்குலகம் கூறிவிடும்.

மேலும் புலிகள் இயக்கம் முஸ்லிம் அடிப்படைவாத பின்னணியைக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தால் இன்று எமது நாட்டின் பாதுகாப்புக்கு நேட்டோ அமைப்பு வந்திருக்கும்.

எனவே உலக நாடுகள் பயங்கரவாதம் தொடர்பில் பொதுவான இணக்கப்பாட்டுடன் கூடிய வரைவிலக்கணம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று யோசனை முன் வைக்கின்றோம். அமெரிக்க உதவி இராஜாங்க செயலக்ஷிளரின் இலங்கை விஜயம் தொடர்பில் பல்வேறு வகையான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்தன. ஆனால் இலங்கை வந்த ரொபட் ஓ பிளேக் மிகவும் மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றுள்ளார்.

இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்கு அமெரிக்கா உதவவில்லை என்ற அவரது அறிவிப்பு, இலங்கையுடன் நெருங்கிய உறவைப் பேணுவது குறித்த அமெரிக்காவின் விருப்பம் என்பன தொடர்பில் அவர் ஆரோக்கியமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

மேலும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்ட ரொபட் ஓ பிளேக் அங்கு மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

அரசியல் ரீதியில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் நாங்கள் உடன்படுகின்றோம். அரசியல் தீர்வின் அவசியத்தை உணர்ந்துள்ள நாங்கள் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றோம். மேலும் ரொபேட் ஓ பிளேக்கின் கருத்துக்கள் தொடர்பில் நன்றி தெரிவிக்கின்றோம்.

தருஷ்மன் அறிக்கை நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சித்துள்ளது. அதனால் சிறிய தாக்கம் ஏற்பட்டது. எனினும் இந்த பொறியில் சிக்கிவிட வேண்டாம் என மக்களிடம் கேட்கின்றோம்.

தமிழ்க் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. ஒருவர் கூற்று ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஆணுக்கும் பெண்ணுக்கும் பிரியும் உரிமை இருக்கும் என்றால் ஏன் சிங்களவர்களும் தமிழர்களும் பிரிந்து வாழ முடியாது என்று குறித்த எம்.பி. கேட்டுள்ளார்.

ஆணும் பெண்ணும் பிரிந்து வாழலாம். ஆனால் சகோதரர்கள் பிரிந்து வாழ முடியாது. சிங்கள மக்களும் தமிழ், முஸ்லிம் மக்களும் சகோதரர்கள் ஆவர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக