6 மே, 2011

நிபுணர் குழுவின் சிபார்சுகள் குறித்து இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும்: பான் கீ மூன்


ஐ,நா. நிபுணர் குழுவின் அறிக்கையிலுள்ள சிபார்சுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் சொத்துக்கள் மற்றும் உத்தியோகத்தர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உண்டு என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா.வுக்கான இலங்கையின் விதிவிடப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன கடந்த செவ்வாய்க்கிழமை பான் கீ மூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்த சந்திப்பின் போதே பான் கீ மூன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை நண்பகல் நடைபெற்ற இந்தச் சந்திப்புக் குறித்து நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஐ.நா.வின் பேச்சாளர் மார்டின் நெசேர்க்கி, பாலிச கொஹனவுடனான சந்திப்பின் போது இரு முக்கிய விடயங்களை பான் கீ மூன் வலியுறுத்தினார். நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்ள சிபார்சுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நிபுணர் குழுவின் அறிக்கையிலுள்ள சிபார்சுகள் குறித்து பொறுப்புக்கூறல் கடப்பாடு தொடர்பில் கவனம் செலுத்துவது இலங்கைக்கு நல்லது என்றும் பான் கீ மூன் சந்திப்பின் போது எடுத்துக்கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் இலங்கையிடமிருந்து முறையான பதிலை எதிர்பார்ப்பதாகவும், பாலித கொஹனவுடனான சந்திப்பு முறையான பதில் அல்ல என்றும் ஐ.நா. வின் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக