6 மே, 2011

ஐ.நா. சாசனத்தில் பயங்கரவாதம் என்ற பதத்தை சேர்க்க இலங்கை பரிந்துரைக்கும்



பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சாசனத்தில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே ஐக்கிய நாடுகள் சாசனத்தில் பயங்கரவாதம் தொடர்பான வாச கத்தை உள்ளடக்குவது தொடர்பாக பரிந்துரை செய்வதற்கு இலங்கைக்கு அதிகாரமுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் திறன் விருத்தி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார்.

நேற்று மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சர்வதேச ரீதியில் இலங்கை மாத்திரமே பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்தது நாடாகும். கடந்த 30 ஆண்டுகாலமாக இலங்கையில் நடைபெற்ற யுத்தம் காரணமாக எமது நாடு பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது. பயங்கரவாத யுத்தம் காரணமாக நாடு பல தலைவர்களையும் இழக்க வேண்டி ஏற்பட்டது.

யுத்தம் தொடர்பாகவும், பயங்கரவாதம் தொடர்பாகவும் இலங்கை அரசாங்கத்திற்கு போதிய அனுபவம் இருக்கின்றது. ஆகவே, ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவமுள்ள நாடென்ற வகையில், ஐ.நா சாசனத்தில் “பயங்கரவாதம்" என்ற வார்த்தையை சேர்த்துக் கொள்வதன் மூலம் பயங்கரவாதம் தொடர்பாக உலக நாடுகளுக்கு எமது அனுபவங்களையும், பயங்கரவாதம் என்றால் என்ன என்பதையும் உலகிற்கு தெளிவாக எடுத்துகாட்ட முடியும்.

இந்த பயங்கரவாதம் என்ற பதத்தை ஐ.நா சாசனத்தில் சேர்த்துக் கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் இதனை சமர்ப்பித்த தருஸ்மன் எதிர்காலத்தில் அமெரிக்கா, நியூயோர்க் நகர் சென்று இலங்கைக்கு எதிராக சமர்ப்பித்த தருஸ்மன் அறிக்கை தொடர்பாக மன்னிப்பு கேட்பார் என அவர் தெரிவித்தார்.

உலகளவில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்படும் விடயம் தருஸ்மன் அறிக்கையாகும். இந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் உத்தியோகபூர்வ ஆவணமல்ல. இது தருஸ்மன் என்பவரினால் பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு அறிக்கையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக