9 பிப்ரவரி, 2011

வெள்ள அனர்த்தம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தேவையான நிவாரண உதவி



பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 மாதகாலத்திற்குத் தேவையான உலர் உணவுப் பொருட்களை வழங்கவும் சேதமடைந்த வீடுகள், குளங்கள், வீதிகள், பாடசாலைகள் என்பவற்றைத் திருத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவோ, கஷ்டத்தில் பங்குகொள்ளவோ, முன்வராத எதிர்க்கட்சிகள் கொழும்பிலிருந்து அரசின் மீது குற்றஞ்சாட்டி வருவதாகவும் அவர் கூறினார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்தினால் நீடிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றி அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியதாவது:-

நாட்டில் 2/3 பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வட மத்திய, மத்திய, கிழக்கு மாகாணங்கள் வெள்ளம், மண் சரிவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு தேவையான நிவாரணங்கள் வழங்கி வருகிறது. ஹெலிகொப்டர், படகுகள் மூலம் உணவு, மருந்துவகைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. முப்படை, பொலிஸார், மருத்துவர்கள், அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் அர்ப்பணிப்புடன் உதவிகளை வழங்கி வருகின்றனர். பல வீதிகளில் இன்னும் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளன.

மக்களுக்கு உதவி வழங்குவதற்காக 6 மாதகால உலர் உணவு வழங்கவும், உடைந்த வீடுகளை திருத்தவும், குளங்கள் திருத்தவும், வீதிகளை புனரமைக்கவும் பாடசாலைகளை மீளமைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பயிர்ச்செய்கைகள் சேதமடைந்திருப்பதால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க துரித உணவு பாதுகாப்புத்திட்டமொன்றை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ள நிலை சீரடையாததால் இந்தப் பணிகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

உணவு உற்பத்தியை மேம்படுத்த முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐ. தே. க. என்ன செய்துள்ளது. ஒரு ஐ. தே. க. தலைவராவது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களின் நிலைமைகளைப் பார்வையிட்டார்களா? இல்லை.

கொழும்பில் இருந்து ஊடகவியலாளர் மாநாடு நடத்துவதை விடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஐ. தே. க. முன்வர வேண்டும்.

வெள்ள நிவாரணம் வழங்குவதில் குறைபாடுகள் உள்ளன. நாடு அனர்த்தத்தில் உள்ள நிலையில் எதிர்க்கட்சி பொறுப்புடன் செயற்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வர வேண்டும். அரசு தனது பொறுப்புகளை சரிவர நிறைவேற்றிவருகிறது. முழு உலகமும் இயற்கை அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்துள்ளன. எமது நாட்டில் அந்த நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு பயிர்ச் செய்கைகள் வெள்ளத்தினால் சேதமடைந் ததால் உணவு, மரக்கறி விலைகள் உயர்வடைந்தன. ஆனால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக