9 பிப்ரவரி, 2011

முன்னாள் பெண் புலி உறுப்பினர்கள்: 99 வீதமானோர் புனர்வாழ்வு பெற்று குடும்பத்தினருடன் இணைவு








பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த புலிகளின் பெண் உறுப்பினர்களில் 99 சதவீதமானோர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டிருப்ப தாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை கள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர நேற்றுத் தெரிவித்தார்.

புலிகளின் செயற்பாடுகளில் தொடர் புடைய 34 மகளிர் மட்டுமே தொடர்ந்தும் புனர்வாழ்வு அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

கொழும்பில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

புலிகளின் செயற்பாடுகளில் தொடர்புபட்ட 11 ஆயிரத்து 309 பேர் பாதுகாப்பு படை யினரிடம் சரணடைந்தனர். இவர்களுக்கு வடக்கிலுள்ள புனர் வாழ்வு நிலையங்களின் புனருத்தாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அதில் 55 சதவீதத்தினர் அல்லது 5809 பேர் இது வரை புனருத்தாரணப்படுத்தப்பட்டு சமூகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு புலிகளின் 99 வீதமான பெண் உறுப் பினர்களும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர்களும், பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களும் 45 வயதை தாண்டிய மற்றும் ஊனமுற்று நோயுற்ற நிலையில் உள்ளவர்களும் புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தப்பட்டு ள்ளனர். புனர்வாழ்வு முகாம்களில் 4500 பேர் இருப்பதாகவும் அதில் 100 பேர் புனருத்தாரணபடுத்தப்பட்டு விரைவில் சமூகத்துடன் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

புனர்வாழ்வு முகாம்களில் தற்போது இருப்பது 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மட்டுமேயாவர். இவர்களுக்கு தொழிற் பயிற்சி வாழங்கவும், புதிய கடன் முறையொன்றின் கீழ் சுயவேலை வாய்ப்புடன் சமூகத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

புனருத்தாரண அதிகார சபையில் பயிற்சி பெற்ற பின் சமூகத்தில் சேர்க்கப்படும் போது விசேட கடன் திட்டத்தின் கீழ் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வழங்கப்படும். அது பத்து வருட காலத்தில் 4 சதவீத வட்டியில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். முதலாவது வருடத்தில் மட்டும் கடன் தொகையில் வட்டியை மட்டும் செலுத்துவது போதுமானதாகும்.

புனர்வாழ்வு முகாம்களில் இருக்கும் சிறுவர்களில் 375 பேர் கடந்த உயர்தர பரீட்சைக்கு தோற்றினர். இதில் 212 பேர் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாகவும் அதில் 40 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அதில் இருவர் மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சமூகத்தில் சேர்க்கப்பட்டவர்களைப் பற்றி பின் விபரம் சேகரிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். அவ்வாறு சமூகத்தில் சேர்க்கப்படுவோரின் பெயர், விலாசம் தொடர்பாக கண்டறியப்படுவதுடன் கிராம சேவையாளர், மாவட்ட செயலாளர் மற்றும் பொலிஸ் மூலம் அந்த செயற்பாடுகள் இடம்பெறும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக