6 நவம்பர், 2010

நுவரெலிய ஜனாதிபதி இல்லத்தில் தீபாவளிக் கொண்டாட்டம்




சமாதானம், அமைதி என்பவற்றின் உன்னத பண்புகளை நன்குணர்ந்து இன்றைய நாளைவிடவும் நாளைய தினத்திலே உலகை பிரகாசிக்கச் செய்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். எனும் தொனிப்பொருளில் இருள் அகன்று ஒளிவீசும் தித்திக்கும் தீபாவளி திருநாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றுக் காலை நுவரெலியா ஜனாதிபதி மாளிகையில் கொண்டாடப்பட்டது.

இந்த திருநாளை கொண்டாடுவதற்காக நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான சிறார்கள் நுவரெலியாவிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்திருந்தனர். பெற்றோரை இழந்த, பல்வேறு காரணங்களினால் அநாதரவான நிலையில் காணப்படுகின்ற மற்றும் விசேட தேவைகளையுடைய சிறுவர்களும் இந்நிகழ்வில் பங்குகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுப் பொருட்களை வழங்கிய ஜனாதிபதி, அண்மையில் இந்தோனேசியாவில் இடம்பெற்ற கனிஷ்ட ஒலிம்பியாட் கணிதத் துறைசார்ந்த போட்டியில் முதலிடம் பெற்ற ஹட்டன், ஹைலண்ட் கல்லூரி மாணவன் ஏ. தீஷாந்தனுக்கு மடிக் கணனி ஒன் றையும் அன்பளிப்பாக வழங்கினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ; தீபாவளி என்பது தீய அசுரனிடமிருந்து மீட்சிபெற்று ஒளிமயமான காலத்தினை ஆரம்பிப்பதற்கு காலடி எடுத்துவைத்த நாளாகும். இன்று எமது நாடும் ஒளிமயமானதொரு நாடாக மாறியுள்ளது. தீயன அகற்றி, சிறந்த நட்புமிக்க, ஒருவருக்கொருவர் பரஸ்பர

புரிந்துணர்வுடன் செயற்படக்கூடிய சமூகமொன்றினை நாம் உருவாக்குதல் வேண்டும். எனவே அதற்காக இந்த உத்தம திருநாளில் அனைவரும் திடசங்கற்பம் பூணுவோம்.

இன்று எமது நாட்டிலே எவருக்கும் விரும்பியவாறு பயமின்றி எந்தவொரு இடத்திற்கும் சென்றுவரக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நாம் பயங்கரவாதத்தை ஒழித்து அமைதியானதொரு நாட்டை கட்டியெழுப்பியுள்ளோம்.

எனவே நாம் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை மிகவும் பயன்வாய்ந்த முறையில் வருங்கால சந்ததியினரிடம் ஒப்படைத்தல் வேண்டும்.

இந்த நாட்டின் இளம் பராயத்தினருக்கு மிகவும் சுதந்திரமாக, மகிழ்ச்சியுடன் வாழக்கூடியதொரு நாட்டினை நாம் உருவாக்கிக்கொடுத்தல் வேண்டும். அதேபோன்று அவர்களது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு நாம் வாய்ப்பளித்தல் வேண்டும். எதிர்வரும் பொதுநலவாய போட்டிகளிலே திறமைகாட்டக்கூடியவாறு இந்த குழந்தைகளை தயார்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்தல் வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வு கால்நடை அபிவிருத்தி கிராமிய சமூகமேம்பாட்டு துறை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இதில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர் சீ. பீ. ரத்னாயக்க, பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ. பீ. ஜீ. குமாரசிரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நுவரெலியா நகரில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளை பார்வையிடச் சென்றார்.

இதன்போது, நுவரெலியா நகரினை அழகுபடுத்தும் வகையில் நீண்டகாலமாக இருந்துவந்த நுவரெலியா நகருக்கென தனித்துவமிக்க பாரிய சைப்பிரஸ் மரங்கள் வெட்டப்பட்டுள்ளமை பற்றி தமது கவலையை தெரிவித்துக் கொண்ட ஜனாதிபதி அவை வெட்டப்பட்டுள்ள இடங்களை பார்வையிடவும் மறக்கவில்லை.

சில தினங்களுக்கு முன்னர் சைப்பிரஸ் மரங்கள் வெட்டப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணித்ததுடன் அதன் பிரகாரம் அந்த மரங்களை வெட்டும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நுவரெலிய நகர மக்களை சந்தித்து சிநேகபூர்வமான முறையில் அவர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி, நுவரெலியா குதிரைப் பந்தய மைதானத்தையும் பார்வையிட் டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக