6 நவம்பர், 2010

போரினால் சேதமடைந்த ஆலயங்கள் அரசாங்கத்தினால் புனரமைக்கப்படும் பிரதமர்

நாட்டை துண்டாடி கூறுபோடுவதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்கப் போவதில்லை. இன, மத, மொழி பேதமின்றி இந்த நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட்டு மஹிந்த சிந்தனை மூலம் உழைக்க வேண்டுமென பிரதமர் தி. மு. ஜயரட்ன தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிலையத்தில் இந்து ஆலயங்களின் நிர்வாகிகள், இந்து மத குருமார் ஆகியோருடனான சந்திப்பில் உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில் தொடர்ந்துரையாற்றிய பிரதமர், குற்றங்கள் புரியாத மனித குலத்தை உருவாக்க சமயங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்து மதத்திற்கும் எங்களது பெளத்த மதத்திற்கும் கலாசார ரீதியான, பண்பாட்டு ரீதியிலான பல்வேறு தொடர்புகள், இணக்கப்பாடுகள் உள்ளன.

சிங்கள மக்களின் திருமணத்தில் நடைபெறும் சடங்கு, சம்பிரதாயம் போன்றே இந்து மதத்திலும் இடம் பெறுகின்றன. இவ்வாறு பல விடயங்களை குறிப்பிட முடியும். நாட்டில் 25,000க்கு மேற்பட்ட வணக்கத்தலங்கள் உள்ளன. இவை அனைத்தையும் பராமரிக்க வேண்டும்.

வடக்கு கிழக்குட்பட நாட்டில் யுத்தத்தினால் சேதமடைந்த இந்து ஆலயங்கள் மற்றும் ஏனைய மதவழிபாட்டுத் தலங்கள் அனைத்தையும் புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

ஆத்மீக விருத்தியை நாம் ஏற்படுத்திக் கொள்வதுடன் அனைத்து மதங்களையும் புரிந்து நடந்து கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும்.

கடந்த 30 வருடகால பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு நாடு சிறந்த சூழலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

இன்று இந்த நாட்டின் அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி காணத் தொடங்கியுள்ளன.

ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின்படி நெடுஞ்சாலை அபிவிருத்தி மற்றும் மின்சாரமில்லாத கிராமங்களுக்கு மின்சாரம் நீர்ப்பாசனம், விவசாயம் என பல்வேறு துறைகளும் இன்று அபிவிருத்தி காணத் தொடங்கியுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரிதுள்ளது. சுற்றுலாத் துறை மூலம் கிடைக்கும் அத்தனை நிதியும், வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் நிதியும் இன்று வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்காக செலவு செய்யப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களும் அபிவிருத்தி கண்டு வருகின்றன.

வெளிநாட்டவர்கள் அச்சமில்லாமல் இலங்கையின் வட கிழக்கிலும் முதலீடு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக நாம் அபிவிருத்தி அடைவது போலவே ஆத்மீக ரீதியாகவும் நல்ல மறுமலர்ச்சி அடைய வேண்டும்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் மூலம் மிகவும் கூடுதலான நன்மையினை வடக்கு கிழக்கு மக்கள் அடைந்துள்ளனர்.

ஏ-9 பாதை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்குக்கான போக்குவரத்து இலகுவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் இன்று நமது நாடு செழிப்பான ஒரு நாடாக முன்னேற்றம் அடைந்து வருகின்றது. இதை மேலும் வலுப்படுத்த நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என பிரதமர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக