4 அக்டோபர், 2010

இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இன்று மேன்முறையீடு

முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு அவரது சட்டத்தரணிகள் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேன்முறையீட்டை இன்று தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா இரண்டாவது இராணுவ நீதிமன்றம் குற்றவாளியாக இனங்காணப்பட்டு அதற்கான பரிந்துரைகளுக்கு ஒப்புதல் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதிக்கு குறித்த தீர்ப்பு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்த பரிந்துரைகளுக்கே முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டார்.

அதன் பிரகாரம் அவருக்கு 30 மாதம் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டார். இராணுவ சேவையில் ஈடுபட்டிருந்த வேளையில் இராணுவ விலைமனுக்கோரல் முறைமைகளுக்கு புறம்பாக செயற்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நிறுவப்பட்ட இரண்டாவது இராணுவ நீதிமன்றம் சரத்பொன்சேகாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அவரை குற்றவாளியாக இனங்கண்டது.

இரவு நேரங்களில் பார்க்கக் கூடிய தொலைநோக்கி, அதிசக்தி வாய்ந்த மின்பிறப்பாக்கி, சக்திவாய்ந்த மின் உபகரணங்கள் மற்றும் சுழலக்கூடிய யூஎச்எப் அன்ரனாக்களை முறையற்ற வகையில் கொள்வனவு செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக