4 அக்டோபர், 2010

நாடெங்கும் அடைமழை:வெள்ளம்; இருவர் உயிரிழப்பு ஆறுகள் பெருக்கெடுப்பு மண்சரிவு அச்சம் மக்கள் வெளியேற்றம்

நாடெங்கிலும் நேற்றும் பரவலாக மழை பெய்துள்ளது. ஆகக் கூடிய மழை வீழ்ச்சியாக குக்குலே கங்கையில் 142 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கயனா ஹெந்த விதாரண தெரிவித்தார்.

இன்று முதல் பெய்யும் மழையின் அளவு குறைவடைய முடியுமென எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவின்படி பொலன்னறுவையில் 117.9 மி.மீ. மதுகமவில் 108.3 மி.மீ. மன்னாரில் 66.4 மி.மீ என்றபடி அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மொனறாகலை மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி கூறினார். அதேநேரம், குருநாகல், அலவ்வ பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக மதிலொன்று வீடொன்றில் சரிந்து விழுந்ததால் மூவர் காயமடைந்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, இம் மழை காரணமாக சில கங்கைகள் பெருக்கெடுக்கும் கட்டத்தை அடைந்துள்ளதா கவும், மலைய கப் பிரதேசங்களில் மண்சரிவு அச்சுறுத் தல்களும் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

அனுராதபுரம், இராஜங்கனை குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வழியும் கட்டத்தை அடைந்துள்ளதால் அதன் இரு வான் கதவுகள் நேற்று காலை முதல் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுவதாகவும் அவர் கூறினார்.

மண்சரிவு அச்சுறுத்தல்

மாத்தளை மாவட்டத்தின் உக்குவளை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள உடுவல, கந்தேமட கிராமங்களில் வசித்து வந்த 75 குடும்பங்களைச் சேர்ந்த 225 பேர் தற்போதைய மழைக் காலநிலை காரணமாக மண்சரிவு மற்றும் பாராங்கற்கள் உருண்டு விழும் அச்சுறுத்தலை எதிர் கொண்டுள்ளனர். அதனால் இக் குடும்ப ங்கள் தற்காலிகமாக நேற்று வெளியேற்ற ப்பட்டு குருலவெல கனிஷ்ட வித்தியால யத்தில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டி ருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாத்தளை மாவட்ட இணைப்பாளர் ஐ. ஏ. கே. ரணவீர கூறினார். மண்சரிவு அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ள மக்கள் இப்பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருப்பதால் பாடசாலை இன்று முதல் இரு நாட்களுக்குத் தற்காலிக மூடப்படும். இதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர்குறிப்பிட்டார்.

இம்மக்களுக்குத் தேவையான நிவாரண நடவடிக்கைகள் மாவட்ட செயலாளரின் ஆலோசனையின் பேரில் பிரதேச செயலாளருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றோம். எமது பணிகளுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரும் ஒத்துழைப்பு நல்குவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, ரத்தொட்டை மற்றும் உக்குவளை பிரதேச செயலகப் பிரிவுகளில் மண் சரிவு மற்றும் பாராங்கற்கள் உருண்டு விழுந்ததால் ஏழு வீடுகள் பகுதியாகச் சேதமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

களனி கங்கை பெருக்கெடுப்பு 80 குடும்பங்கள் பாதிப்பு

கம்பஹா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் அஜித் நிஷாந்த குறிப்பிடுகையில், தற்போதைய மழை காரணமாக களனி கங்கை சில பிரதேசங்களில் பெருக்கெடுத்துள்ளது. இதனால் களனி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மேவெல்ல கிராமத்தில் 80 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 பேரளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு சில வீடுகளுக்குள் மூன்றடி உயரத்திற்கு நீர் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

அலவ்வயில் மதில் விழுந்து மூவர் காயம்

இதேவேளை குருநாகல் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் டப்ளியு, எம். எஸ். பி. வன்னிநாயக்கா கூறுகையில், அலவ்வ பிரதேசத்தில் நேற்று முன்தினம் பெய்த கடும் மழை காரணமாக போவல என்ற கிராமத்திலுள்ள வீடொன்றின் மீது மதிலொன்று நேற்று முன்தினம் நள்ளிரவு இடிந்து விழுந்ததால் மூவர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இதேநேரம் தெதுறு ஓயாவுடன் இணைகின்ற தோரயாய கால்வாய் கடந்த முதலாம் திகதி நள்ளிரவு பெருக்கெடுத்தது. இதனால் தோரயாய கிராமத்தில் வசிக்கும் 20 குடும்பங்களைச் சேர்ந்த 71 பேர் பாதிக்கப்பட்டனர்.

மாவத்தகம பிரதேச பிரிவிலுள்ள பண்டாரகல, கெட்டிபொல, மெட்டி பொக்க கிராமங்களிலும் இம்மழை காரணமாக ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் பாதிக்கப்பட்டனர் எனவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக