4 அக்டோபர், 2010

‘என்னை சர்வதேச நீதிமன்றின் முன் நிறுத்துவதே பலரின் நோக்கம்’ ஜனாதிபதி






“நாட்டை முழுமையாக மீட்டு ஐக்கியத் தில் கட்டியெழுப்பிவரும் நிலையில் என்னை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதே பலரின் நோக்கமாகவுள்ளது.” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பொலனறுவைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலதிஸி மண்டபத்தில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கான சேவையை நிறைவேற்றும் போது நாம் கட்சி, நிறம் என பேதம் பார்ப்பதில்லை.

வட மத்திய மாகாணத்தை உள்ளடக்கும் அனுராதபுரம், பொலனறுவை மாவட்டங்களின் மக்கள் தேவையை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கு இம்முறை வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்குவதற்குத் தயாராகிவருகின்றோம்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு மாவட்டத்தில் ஒரே கட்சியின் உறுப்பினர்கள் மட்டும் பாராளுமன்றத்தில் அமரும் காலம் இது. பொலனறுவை மாவட்டத்தில் ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த ஏர்ள் குணசேகரவும் இப்போது எம்முடன் உள்ளார்.

முப்பது வருடங்களுக்குப் பின்னர் நாட்டின் சகல பிரதேசங்களும் தற்போது எம் வசம் உள்ளன. பொலனறுவை மாவட்ட மக்கள் புலிகளிடமும் காட்டு யானைகளிடமும் சிக்கித் தவித்த காலகட்டங்களை நாம் மறக்கவில்லை. சிங்கப்பூரைப் போன்று 20 மடங்கு பிரதேசத்தைப் புலிகள் தம் வசம் வைத்திருந்தனர்.

கடற் பரப்பில் 3ல் இரண்டு அவர்களிடம் இருந்தது. இப்போது சகலதும் இணைக்கப்பட்டு ஒரே ஆட்சியின் கீழ் ஒரே கொடியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்கள் நிம்மதியாகவும் ஐக்கியமாகவும் வாழக்கூடிய சூழலை எம்மால் உருவாக்க முடிந் துள்ளது.

இந்த நிலைக்கு நாட்டைக் கொண்டு வருவதற்கு மதத் தலைவர்களும் மக்களும் வழங்கிய பங்களிப்புகள் அளப்பரியவை. அதற்காக அவர்களுக்கு நாம் நன்றிகூறுகின்றோம். இப்போது எல்லைக் கிராமங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. இம் மாவட்டம் அரசர்கள் ராஜதானிகளைக் கொண்டிருந்த மாவட்டமாகும். இங்கிருந்து முழுநாட்டிற்கும் அரிசி வழங்க முடியும்.

விவசாய சமூகத்தின் சகல தேவைகளையும் நிறைவேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தமது பிள்ளைகள் விடயத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்.

பொலனறுவை மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்குச் செல்வோரின் தொகை குறைவடைந்துள்ளதாக அறிய முடிகிறது. பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியை வழங்குவதில் பெற்றோர் உரிய பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் வழங்குவது அவசியமாகும்.

நாம் எத்தகைய அபிவிருத்திகளை மேற்கொண்டாலும் பிள்ளைகளை, கல்வியிலும் ஒழுக்கத்திலும் முன்னேற்றாவிடில் பயனில்லை. பிள்ளைகள் போதைக்கு அடிமையாகாமல் நல்வழியில் செல்ல பெற்றோர்களும் அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயற்படவேண்டும். குறிப்பாக பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாகத் திகழவேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக