15 செப்டம்பர், 2010

தடுத்து வைக்கப்பட்ட ஆயிரக் கணக்கான முன்னாள் போராளிகள்






கடந்த வருடம் யுத்தம் முடிவுக்கு வந்தபின் தடுத்து வைக்கப்பட்ட ஆயிரக் கணக்கான முன்னாள் போராளிகள் தற்போதும் தடுப்பு முகாம்களில் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் அரசாங்கத்தால்; படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருவதை நீங்கள் செய்திகளில் பார்த்திருக்கலாம். இந்தவாரம் பம்பைமடு முகாமிலிருந்து 508 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பு முகாம்களிலுள்ள மற்றயவர்களையும் விடுவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்படியான சூழ்நிலையில்.புலம்பெயர் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் கனவுலகில் வைத்திருக்கும் திட்டத்துடன் ஒரு சிலரால் சில கருத்துகள் இப்போதும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
புலம்பெயர் உறவுகளைக் குழப்பும் நோக்கில் சிலரால் வெளியிடப்படும் சில கருத்துக்கள் இன்றைய திகதியில் இலங்கையிலுள்ள யதார்த்தமான சூழ்நிலையிலிருந்து வேறுபட்டவை. இரண்டுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் இருப்பதைச் சமீபகாலமாக இலங்கைக்கு வந்து திரும்பிய புலம்பெயர் உறவுகளில் பெரும்பாலானோர் நேரில் கண்டிருக்க முடியும்.
தொடர்ந்தும் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளவர்களில் அநேகர் தாமாக விரும்பியோ. அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளாலோ கடந்த வருடம்வரை ஆயுதப் போராட்டத்தில் இணைக்கப்பட்டிருந்தவர்கள். தற்போது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கின்றது. இதை யார் ஏற்றுக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் நிஜம் அதுதான். அப்படியான நிலையில் இந்த முன்னாள் போராளிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு அவர்கள் தமது இயல்பு வாழ்க்கையைத் தொடரக்கூடிய சாத்தியம் இருக்கின்றது.
அதை எவ்வளவு விரைவில் சாத்தியமாக்க முடியுமோ அவ்வளவு விரைவில் செயற்படுத்த முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் மறுபுறத்தில் புலம்பெயர் உறவுகள் மத்தியில் சிலரால் வெளியிடப்படும் உண்மைக்கு மாறான அல்லது உசுப்பேற்றி விடும் கருத்துக்கள் தடுப்பு முகாம்களிலுள்ள முன்னாள் போராளிகள் விடுவிக்கப்படுவதற்கு உலை வைக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.
விடுதலைப்புலிகளின் தலைவர் மீண்டும் வெளிப்பட்டு படையுடன் வருவார் என்று ஒரு கதை. இந்தக் காட்டில் இத்தனை ஆயிரம் பேர் ஆயுதங்களுடன் தயாராக இருக்கிறார்கள், அல்லது அந்த நாட்டில் இத்தனை ஆயிரம் பேர் பயிற்சி எடுத்தபின் காத்திருக்கிறார்கள் என்று மற்றொரு கதை. இந்த ரீதியில் கூறப்படும் உசுப்பேற்றிவிடும் கதைகள் எவையும் உண்மைக்கு அருகில்கூட இல்லை.
இப்படியான கதைகளை வெளிநாடுகளில் பரப்புவது புலம்பெயர் உறவுகளில் மிகச் சிலரை சிறிது காலத்துக்கு ஒருவித மாயையில் வைத்திருக்க வேண்டுமானால் உதவலாமே தவிர நீண்ட காலத்துக்கு இதேபோல கனவுக் காட்சியைக் காட்டிக்கொண்டிருக்க முடியாது.
ஆனால் அதேநேரத்தில் இப்படியான கதைகள் வெளியே உலாவிக் கொண்டிருப்பது தடுப்பு முகாம்களில் இருக்கும் முன்னாள் போராளிகளின் நிலைமையைத்தான் மேலும் சிக்கலாக்கி விடுகின்றது என்பதைச் சம்மந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நாளைக்கே மீண்டும் ஆயுதப் போராட்டம் தொடங்கும் என்று வெளியே கதை விட்டுக் கொண்டிருப்பது தடை முகாமிலுள்ள போராளிகள் விடுவிக்கப்படுவதற்கு அரசியல் ரீதியாகத் தாமதங்களை ஏற்படுத்தும். சில வேளைகளில் நிரந்தரமாகத் தடையைக்கூட ஏற்படுத்திவிடக்கூடும்.
இந்த விஷயம் இப்படியான அம்புலிமாமாக் கதைகளை வெளிநாடுகளில் பரப்பிக் கொண்டிருப்பவர்களுக்குத் தெரியாதா? நிச்சயமாகத் தெரியும். ஆயுதப் போராட்டம் இனியும் சாத்தியமில்லை என்பது யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ, இப்படியான கதைகளை உலாவ விட்டுக் கொண்டிருக்கும் புண்ணியவான்களுக்கு மிக நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் தமது சுய அரசியல் விளையாட்டுக்களுக்காக இந்தக் கதைகள் அவர்களால் பரப்பப்படுகின்றன.
அப்படியானவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். உங்கள் சுய லாபத்துக்கான நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் தடை முகாம்களில் விடுதலைக்காக்க் காத்திருக்கும் இந்த முன்னாள் போராளிகளில் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்.
அவர்களில் பலர் இனித்தான் தமது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய வயதுகளில் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட அனைவரும் இனித்தான் பூச்சியத்திலிருந்து தமது வாழ்கையைக் கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அவர்களது விடுதலையில் உங்களால் ஏற்படுத்தப்படும் தாமதம் எவ்வளது கேவலமானது என்பதைப் பற்றி நீங்கள் வெளியே யாரிடமும் கேட்க வேண்டாம், உங்கள் மனச்சாட்சியையே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
அவர்களை விடுவிப்பதற்கு நீங்கள் உதவிதான் செய்யவில்லை. உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரபமாவது செய்யாமல் இருந்தால் போதும். இதுவே இந்த முன்னாள் போராளிகளுக்கு உங்களால் செய்யக்கூடிய மிகப்பெரிய உபகாரமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக