15 செப்டம்பர், 2010

சிறைக்குள் குற்றங்களை ஒழிக்க கடும் நடவடிக்கை சிறைக்கைதிகள் நலன்புரி தின நிகழ்வில் ஜனாதிபதி






சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த கடுமையான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

பாரிய குற்றச் செயல்களுக்குத் திட்டம் தீட்டும் இடமாக சிறைக் கூடங்கள் உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம் முன்னெடு க்கப்படுமெனவும் தெரிவித்தார்.

குற்றச் செயல்களுக்கு துணைபோகக் கூடாதென சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்திய ஜனாதிபதி, புதிய சிறைச்சாலைகளை திறப்பதற்குப் பதிலாக சிறைச்சாலைகளை மூடிவிடும் நிலையை உருவாக்க பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். அத்துடன் சிறைக் கூடங்களில் இடம்பெறும் கையடக்கத் தொலைபேசிப் பாவனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

சிறைக்கைதிகள் நலன்புரி தினம் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் டியூ குணசேகர, பிரதியமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் வீ.ஆர்.த சில்வா ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

“சிறைக்கைதிகளின் அனுபவம் எனக்குப் புதியதல்ல. நானும் சிறையிலிருந்திருக் கின்றேன். எனினும் சிறு சிறு குற்றச் செயல்களுக்காக சிறைத்தண்டனை வழங்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். குற்றங்களுக்குத் தீர்வாக சிறைத்தண்டனையளிக்கும் மன நிலை இல்லா தொழிய வேண்டும்.

சிறைச்சாலை தொடர்பான பல சட்டமூலங்கள் உள்ளன. சிறைக்கைதிகளின் நலன்புரி விடயங்கள் தொடர்பான சட்டமூலங்களும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி இவற்றில் மாற்றம் கொண்டுவர முடியும். உதாரணமாக ஆயிரம் ரூபா தண்டப்பணத்தைச் செலுத்த முடியாத ஒருவருக்கு ஓரிரண்டு வாரங்களுக்கு ஏதாவது வேலையொன்றைத் தண்டனையாகக் கொடுக்கலாம். அது சமூகத்திற்கும் பயனுள்ளதாக அமையும்.

தற்போது குற்றச் செயல்களுக்கான வழக்குகளை விட விவாகரத்து தொடர்பான வழக்குகளே அதிகமுள்ளன. குடும்பங்களில் அவ்வாறான பிரச்சினைகள் உள்ளமையே அதற்குக் காரணம். இது விடயத்தில் யதார்த்தத்தை உணர்ந்து செயற்படும் யுகம் இன்று உருவாகியுள்ளது.

பெரும் குற்றச்செயல்களுக்கு மூல காரணமாக சிறைச்சாலைகள் உள்ளன. இதனை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறையில் கையடக்கத் தொலைபேசிகளை உபயோகப்படுத்தி வருகின்றனர். இன்று காலை கூட எனக்கு அவ்வாறு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நான் அதை நிராகரித்துவிட்டேன். சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசி பாவனையை முற்றாக நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

செய்யாத குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவிப்போரும் உள்ளனர். மகனுக்காக தந்தையொருவர் சிறைத்தண்டனையை அனுபவித்ததையும் நான் அறிவேன். மனிதர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் உள்ளனர். அத்தகைய கெட்டவர்களையும் நல்லவர்களாக மாற்றும் பொறுப்பு சிறை அதிகாரிகளுடையது. தேங்காய் திருடிய குற்றத்திற்காக சிறைத்தண்டனை வழங்கி பின் அவன் கொலைக்குற்றவாளியாக உருவாகிய சம்பவமொன்றும் உள்ளது.

கடந்த காலங்களில் எனக்கு அவதூறுகளை விளைவிக்க சிலர் சில பத்திரிகைகளை உபயோகப்படுத்தினர். அப்போது நான் மெளனமாக இருந்தேன். இன்று அதே பத்திரிகைகள் அவர்கள் தொடர்பான அவதூறுகளை பிரசுரிக்கின்றபோது தான் அதன் தாக்கம் அவர்களுக்குப் புரிகிறது.

தவறிழைத்து விட்டு சிறைத்தண்டனை அனுபவிப்போர் மட்டுமன்றி, அவர்களின் முழுக் குடும்பத்தினரும் சிறையிலடைக்கப்பட்டவர்களாக துன்பங்களை அனுபவிக்கின்றனர். தண்டனையிலிருந்து விடுதலை பெறுவோர் மீண்டும் தவறிழைக்காமல் நாட்டையும், குடும்பத்தையும் சமூகத்தையும் நேசிப்பவர்களாக மாறவேண்டும். 30 வருடங்களுக்குப் பின் சுதந்திரமடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதில் பொறுப்புள்ள பிரஜைகளாக அவர்களும் செயற்பட வேண்டும்.”

இவ்வாறு ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக