15 செப்டம்பர், 2010

வாடகை நிலுவைகளை அறவிடுவதில் நகர அபிவிருத்தி அதிகார சபை மும்முரம் கோடிக்கணக்கான ரூபா பாக்கி; சட்டத்தை திருத்த குழு




நட்டத்தில் இயங்கி வரும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதற்கு நிலுவையாக உள்ள வாடகை மற்றும் திட்டக் கொடுப்பனவுகளை சேகரிப்பதில் தற்போது மும்முரம் காட்டி வருகிறது.

நகர அபிவிருத்தி அதிகார சபை (மஈஅ) 2500 மில்லியன் ரூபா நட்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் அதிகார சபையின் வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைக்க வேண்டிய வாடகை மற்றும் நிறுவனங்களிடம் இருந்து கிடைக்க வேண்டிய திட்ட கொடுப்பனவு ஆகியவற்றை துரிதமாக சேகரிப்பதற்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

அத்துடன் மேற்படி வாடகை மற்றும் கொடுப்பனவுகளை பெறுவதில் உள்ள கஷ்டங்களை நீக்கும் வகையில் அதிகார சபையின் 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க சட்டத்தை திருத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு செயலாளரின் உத்தரவின் பேரில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சட்டவிரோத கட்டடங்களை அகற்றுவதற்கு அதிகார சபை நேரடியாக தலையிடும் வகையிலும் மேற்படி சட்டத்தில் சில சரத்துகள் சீரமைக்கப்படவுள்ளன. சட்டவிரோத கட்டடங்களை அகற்றுவதற்கு நீதிமன்ற அங்கிகாரத்துக்காக மேலதிகமாக செலவிடப்படும் நிதியை இதனால் அதிகார சபைக்கு குறைத்துக்கொள்ள வழியேற்படும் என அதிகார சபை வட்டாரங்கள் கூறுகின்றன.

இதேவேளை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அதன் வாடிக்கையாளர்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபா வாடகைப் பணம் நிலுவையில் இருப்பதாக அதிகார சபையின் அமுல்படுத்தும் பணிப்பாளர் டபிள்யூ. ஏ. சிறிவர்தன கூறினார்.

பீபள்ஸ் பார்க், புறக்கோட்டை, சென் ஜோன் மீன்கடை புறக்கோட்டை, கொழும்பு சென்ட்ரல் சுப்பர் மார்க்கட் தொகுதி புறக்கோட்டை, சார்மர்ஸ் கிரனரி, கோட்டை ஆகியவை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பெருமளவு வாடகையை நிலுவையாக வைத்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக