15 செப்டம்பர், 2010

சம்பந்தன், மாவையின் பிள்ளைகள் யுத்தத்தின் துன்பத்தை அனுபவிக்கவில்லை அப்பாவிகளே பாதிப்புற்றனர்; கிளிநொச்சியில் ரங்கா எம்.பி.

அரசியல் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோரின் பிள்ளைகள் யுத்தத்தின்போது துன்பங்களை அனுபவிக்கவில்லை. அவர்கள் இந்தியாவிலும், இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா தெரிவித்தார்.

அப்பாவித் தமிழ் மக்களின் பிள்ளைகள் யுத்தத்தின் துன்பங்களை அனுபவிக்கையில் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோரின் பிள்ளைகள் வெளிநாட்டு பல்கலைக்கழகங் களில் கல்வி பெற்றனர். ஆனால் தேர்தல் காலங்களில் இந்த அப்பாவி மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இவர்கள் வந்து விடுகின்றனர். தம்பிள்ளைகளைப் போன்று அடுத்தவரின் பிள்ளைகளையும் பார்க்க வேண்டிய பண்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வரவேண் டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யுத்தம் காரணமாக அழிவுற்று ள்ள கிளிநொச்சி உட்பட்ட வட பகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை யிலான தென்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் மீளக் கட்டியெழுப்பும் பணியை முன்னெடுத்திருக்கின்றனரே தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அல்லர் என்றும் அவர் கூறினார். ‘இளைஞர்களுக்கான நாளை’ அமைப்பின் தலைவரும், அம்பாந்தோட்டை மாவட்ட எம்.பி.யுமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ள புதிய இளம் எம்.பி.க்கள் குழுவில் எம்.பி.ஜே. ஸ்ரீரங்காவும் இடம்பெற்றுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:-

‘30 வருடகாலம் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் முடிவடைந்த பின்னர் தென் பகுதியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கிளிநொச்சி மாவட்டத்துக்கு சென்று இந்த மக்களின் தேவைகளை கண்டறிவது மிகவும் சிறப்பான உதாரணம் ஆகும். எப்போதும் நாட்டினதும் மக்களினதும் வெற்றியை நோக்கிய தேவைகளை பூரணப்படுத்தும் செயற்பாடுகள் அவசியமானவை.

யுத்தத்தால் சீரழிந்து போன பிரதேசங்களில் அரசாங்கம் ஆரம்பித்துள்ள துரித அபிவிருத்தித் திட்டங்களில் இப்பகுதி மக்கள் பிரதிநிதிகளினதும் மற்றும் அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு அவசியமாகியது. யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பிரதேசத்தில் உள்ள சிறுவர்களே. அவர்களுக்கு உதவவேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும்.

மாவை சேனாதிராஜா, சம்பந்தன் ஆகியோரின் பிள்ளைகள் யுத்தத்தின்போது துன்பங்களை அனுபவிக்கவில்லை. அவர்கள் அப்போது இந்தியாவிலும் இங்கிலாந்திலும் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வந்தனர். தமது பிள்ளைகளைப் போலவே மற்றோரின் பிள்ளைகளையும் கருதுவதற்கு நாம் பழகிக்கொள்ள வேண்டும்.

30 வருட காலம் துன்பங்களை அனுபவித்த மக்களின் வாக்குகள் மூலம் அதிகாரத்துக்கு வந்துள்ள பிரதிநிதிகள் மக்களின் கஷ்டங்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவுவது கடமையாகும். அக்கஷ்டங்களை அப்பிரதிநிதிகள் நேரில் கண்டறியவும் வேண்டும்.

முப்பது வருட கால பயங்கரவாதத்தினால் இழந்தவற்றை மீண்டும் ஒரே நாளிலோ 24 மணி நேரத்திலோ பெற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு பெற்றுக்கொள்ள குறிப்பிடத்தக்க காலம் செல்லும். எனினும் அதற்கான ஆரம்பம் இப்போது ஏற்படுத்தப்பட்டுவிட்டது.

நாமல் ராஜபக்ஷ மற்றும் இங்கு வருகை தந்துள்ள புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் அல்ல. எனினும், முப்பது வருடங்கள் துன்பமுற்ற மக்களுக்கான தமது கடமைகளை நிறைவேற்றவே அவர்கள் இங்கு வந்துள்ளனர். ஆனால் இதனை உண்மையிலேயே செய்ய வேண்டியவர்கள் இந்த பிரதேசத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளே.

ஆனால் அவர்கள் இதனைச் செய்ய முன்வரவில்லை. ஐந்து வருடங்களுக்கொருமுறை மக்களை ஞாபகப்படுத்தும் முறைமையை நாம் அனைவரும் மறந்துவிட வேண்டும். அரசாங்கம் ஆரம்பித்துள்ள அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தையும் விமர்சித்துக் கொண்டிருப்பதைவிட அதற்கு ஒத்துழைப்பு வழங்கி அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றி, அதன் பயனை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது மக்கள் பிரதிநிதிகளின் கடமை என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஸ்ரீரங்கா குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ, சந்திரகுமார, உதித லொகுபண்டார, கணக ஹேரத், செஹான் சேமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக