15 செப்டம்பர், 2010

18வது அரசியலமைப்புத் திருத்தம்; அமெரிக்காவின் கருத்து உள்விவகார தலையீடாகுமென இலங்கை அதிருப்தி





“18 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக அமெரிக்கா தெரிவித்துள்ள கருத்து எமது நாட்டின் உள்விவகாரத்தில் தலையீடு செய்வதாகும். இது தொடர்பிலான எமது அதிருப்தியை அமெரிக்காவுக்கு தெரிவித்துள்ளோம்” என்று தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரீசியா படனிஸ் நேற்று ஊடகத்துறை அமைச்சரை ஊடக அமைச்சில் வைத்து சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக ஊடகவியலாளர்க ளுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்ட வாறு கூறினார்.

ஊடக சுதந்திரம், ஊடக அபிவிருத்தி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் உட்பட பல முக்கிய விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது ஆராயப்பட்ட தாகவும் அமைச்சர் கூறினார்.

18ஆவது திருத்தம் தொடர்பாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நேரடியாக வெளியிட்டதாக கூறிய அவர், இலங்கை இறைமையுள்ள நாடு எனவும் அதன் உள் விவகாரங்களில் தலையீடு செய்ய இடமளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவித்ததாவது:-

“அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பிலான எமது தெளிவான நிலைப்பாட்டை முன்வைத்தோம். எமது நிலைப்பாட்டை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார். ஒரு நாட்டின் உள்விவகாரம் தொடர்பில் செயற்படுகையில் இதனைவிட கவனமாகவும் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும்.

ஊடக அதிகார சபை குறித்தும் இரு தரப்பிடையே பேசப்பட்டது. ஊடவியலாளர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு உதவி அளிப்பதற்கு அமெரிக்கா முன்வந்தது. அதனை நாம் மகிழ்ச்சியுடன் ஏற்கிறோம். பிரதேச மட்டத்தில் ஊடக மத்திய நிலையங்கள் அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நாம் அமெரிக்காவைக் கோரினோம்.

புலிப் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து தப்பி ஒரே நேரத்தில் 3 இலட்சம் பேர் இடம்பெயர்ந்து வந்தனர். அவர்களை நாம் பட்டினி போடவில்லை. மீள்குடியேற் றும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. தற்பொழுது 28 ஆயிரம் பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை குறித்து ஆராயப்படுவது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், பிரித்தானிய பாராளுமன்றத்தில் இதற்கு முன்னரும் இலங்கை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. வேறு நாடுகள் குறித்து பேசுவதற்கு அவர்களுக்கு கால அவகாசம் இருக்கிறது. இது குறித்து வெளிவிவகார அமைச்சு உரிய கவனம் செலுத்தி வருகிறது எனக் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக