20 ஆகஸ்ட், 2010

அடுத்த இராணுவ நீதிமன்ற தீர்ப்பு சிறைத்தண்டனையாகவும் இருக்கலாம்:சரத் பொன்சேகா

பதவிகள், பதக்கங்கள் மற்றும் ஒய்வூ தியம் ஆகியவை என்னிடம் இருந்து பறிக்கப்பட்ட தையிட்டு நான் ஒருபோதும் கவலைப்படப் போவதில்லை.

அடுத்த இராணுவ நீதிமன்றத்தில் எனக்கு எதிரான தீர்ப்பானது சில வேளைகளில் சிறைத்தண்டனையாகக்கூட அமையலாம் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவருமான சரத் பொன்சேகா எம்.பி.நேற்று தெரிவித்தார்.

எனக்கெதிராக அமைக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்ற மானது போலியானதும் பித்தலாட்டமானதுமாகும் என்றும் அதன் தீர்ப்புக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் முன்னரே கூறியிருத்தேன்.

அதனையே இப்போதும் கூறிக்கொள்கிறேன். இந்த தீர்ப்பு தொடர்பில் நடைமுறையில் இருக்கின்ற சட்டங்களை நிதானமாக ஆராய்ந்து வருகின்றோம் என்றும் அவர் கூறினார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே சரத் பொன்சேகா எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்;

இராணுவ நீதிமன்றத்தினால் எனக்கெதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது எனக்கு மட்டுமே பொதுவானதல்ல.

இவ்வாறான அநீதி நாட்டு மக்களுக்கும் இழைக்கப்பட்டு வருகின்றன. இந்நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்பதற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றியிருக்கிறேன்.

எனது சேவையின் போது நான் பட்டம், பதவிகளையோ அல்லது பதக்கங்களையோ எதிர்ப்பார்த்து நான் புலிகளையும் அவர்களது பயங்கரவாதத்தையும் ஒழித்துக்கட்ட செயற்பட்டதில்லை.

மேலும் எனக்கு கிடைக்கப் பெற்றுவந்த 50 ஆயிரம் ரூபா ஓய்வூதியத்தை அநாதைகளுக்காக ஒதுக்குவதற்கு தீர்மானித்திருந்தேன்.

அது இப்போது கொள்ளையிடப்பட்டுள்ளது. இது கவலைக்குரிய விடயம்.ஆனாலும் பதவிகள் பட்டங்கள் மற்றும் பதக்கங்களைப் பறித்தமையையிட்டு நான் கவலையடையப்போவதில்லை.

எந்த நாட்டிலுமே நடைபெறாத ஒன்றுதான் இங்கு நடந்துள்ளது. இந்நாட்டில் சட்டமும் இல்லை. ஒழுங்கும் இல்லை.

இராணுவ சம்பிரதாயங்கள் இங்கு முற்று முழு தாக உடைத்தெறியப்பட்டுள்ளன.எனது அர்ப்பணிப்புடனான சேவை குறித்து நாட்டு மக்கள் நன்கறிவர். இந்நிலையில் எனக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இல்லாவிட்டால் இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பில் மகிழ்ச்சி கொள்ளும் ஒரு சிலரே இங்கு இருக்கின்றனர்.

நான் எம்.பி பதவி இழக்கப்பட்டாலும் கூட நாட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய தூரநோக்கு கொண்ட பாரிய சேவைகள் உள்ளன. அந்த இலக்கிலேயே செயற்பட்டு வருகின்றேன்.

மேலும் எனக்கிழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பில் சட்ட ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கென தற்கால சட்ட வரைவுகளை ஆராய்ந்து வருகின்றோம்.

யுத்தம் உக்கிரமடைந்த காலம் பகுதியுட்பட சுமார் நான்கு வருட காலங்கள் ஜனாதிபதியுடனும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடனும் நெருங்கிப் பழகியுள்ளேன். இந்நிலையில் எனக்கெதிரான அடுத்த இராணுவ நீதிமன்ற தீர்ப்பானது ஒருவேளை சிறைத் தண்டனையாகக் கூட இருக்கலாம். அவ்வாறு அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏனெனில் என் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது அமைச்சரவையிலும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக