20 ஆகஸ்ட், 2010

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை விடயத்தில் அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை:கெஹெலிய


ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை விடயத்தில் ஒன்றியம் இம்முறை எமக்கு விதித்த நிபந்தனைகள் அந்த வேலைத்திட்டத்துடன் தொடர்புபடாதவையாக இருக்கின்றன.

எனவே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்த வரிச் சலுகை ரத்துச் செய்யப்படுவதால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய தேவையான முன்னேற்பாடுகளை அரசாங்கம் எடுத்துள்ளது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தொழிலாளர் உரிமைகள் மற்றும் சட்டங்கள் தொடர்பில் அவர்களுக்கு பதிலளிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை திட்டத்துடன் சரத் பொன்சேகா எம்.பி. விவகாரம் மற்றும் 17 ஆவது திருத்தச் சட்டத்தை எவ்வாறு தொடர்புபடுத்த முடியும்? என்று அவர் கேள்வி யெழுப்பினார். கொழும்பில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது :

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை தொடர்ந்து வழங்குவது தொடர்பில் ஆராய தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அரசங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை என்பதனை தெரிவிக்கவேண்டும்.

அதாவது ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை கடந்த சில வருடங்களாக நாங்கள் அனுபவித்தோம். அப்போது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த ஒழுங்கு முறைமைகளுக்கு ஏற்ப பதில்களை வழங்கினோம்.

ஆனால் தற்போது ஒழுங்கு விதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை தொடர்பான விடயத்தில் தொழிலாளர்கள் உரிமை குறித்து பேசலாம். அதற்கு பதிலளிக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது.

எனினும் அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தச் சட்டத்தையும் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் எவ்வாறு முன் வைக்கலாம்? அதற்கும் தொழிலாளர் சட்டங்களும் என்ன தொடர்பு உள்ளது?

எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இந்த திட்டத்துக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம். துறைசார் முக்கியஸ்தர்களுடனும் உற்பத்தியாளர்களுடனும் பேச்சு நடத்தியுள்ளோம். மேலும அந்நிய செலாவணி விடயத்திலும் சில ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம். கேள்வி: அரசியலமைப்பு திருத்த விவகாரங்கள் எந்த மட்டத்தில் உள்ளன?

பதில்: அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுக்கும் விளக்கமளிக்கவுள்ளோம்.

கேள்வி: காலியில் ஆர்ப்பாட்டம் செய்த ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. க்கள் கைது செய்யப்பட்டனரே?

பதில்: அவர்கள் பொலிஸாரை தாக்கச் சென்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதே?

கேள்வி:ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் விசாரிக்க சென்றபோதுதான் குறித்த எம்.பி. க்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே?

பதில்: எனினும் மறு பக்கத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொலிஸ் நிலையங்களில் தாக்குதல் நடத்துவது ஜே.வி.பி. க்கு பழக்கப்பட்ட விடயதமல்லவா?

கேள்வி:: எனினும் இவ்வாறான சம்பவங்கள் சரியானவையா?

பதில்:முறைப்பாடுகள் உள்ளனவே? மேலும் நாம் சட்டத்துக்கு உட்பட்டு அல்லவா? செயற்படவேண்டும்.? ஐந்து நட்சத்திர தரத்தில் ஜனநாயகம் உள்ள நாடுகளிலும் இவ்வாறு நடைபெறுகின்றது. ஆனால் அதற்கு பின்னர் என்ன நடக்கின்றது என்பதே முக்கியமான விடயமாகும். அதன் பின்னர் அவற்றைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதே முக்கியமான விடயமாகும்.

கேள்வி: அப்படியானால் முறைப்பாடு செய்யப்படாமல் மேர்வின் சில்வா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது சரியா?

பதில்: அவர் மீது கட்சியே நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரரணை நடைபெறுகின்றது.

கேள்வி: குற்றம் நிரூபிக்கப்படாமல் பதவியை எடுக்கலாமா?

பதில்:அது கட்சியின் தீர்மானம். தற்போது ஒழுக்காற்று விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

கேள்வி: அப்படியானால் பம்பலப்பிட்டியில் இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் அடித்துக் கொலை செய்யப்பட்டபோது எவ்வாறு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது? முறைப்பாடு செய்யப்படவில்லையே?

பதில்: சட்டத்தில் சிவில் சட்டக்கோவை மற்றும் குற்றவியல் சட்டக் கோவை என இரண்டு விடயங்கள் உள்ளன. சட்டம் குறித்து நாம் தர்க்கம் செய்யலாம். ஆனால் அதனைதான் நடைமுறைப்படுத்தவேண்டும்.

தற்போது ஊடகத்துறை சுதந்திரம் இல்லை என்று கூறுகின்றனர். ஆனால் வார இறுதி பத்திரிகைகளை எடுத்துப் பாருங்கள். ஜனாதிபதி தொடக்கம் அனைவர் தொட்டர்பிலும் பொய்யான தகவல்களையும் எழுதுகின்றனர். இது சரியானதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக