20 ஆகஸ்ட், 2010

தினமொன்றுக்கு 40,000 பீப்பாய் மசகு எண்ணெய் இறக்குமதி இலங்கை - ஈரான் ஒப்பந்தம் மேலும் ஒரு வருட காலம் நீடிப்பு





ஈரானிலிருந்து தினமொன்றுக்கு 40,000 பெரல் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இலங்கை - ஈரான் ஒப்பந்தம் மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிக்கப்படவுள்ளது.

அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது என அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ஈரான் தேசிய எண்ணெய்க் கம்பனி (சஐஞஇ) யுடன் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி தினமொன்றுக்கு 40,000 பெரல் மசகு எண்ணெய்யை (வருடாந்தம் 2 மில்லியன் மெற்றித் தொன்) கொள்வனவு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது.

சுமார் ஒரு மாத காலம் வட்டியில்லா கடன் அடிப்படையில் வழங்கப்பட்ட சலுகை 2007 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் ஈரான் விஜயத்தின் பயனாக 4 மாத வட்டியில்லா கடன் அடிப்படையில் இலங்கைக்கு எண்ணெ ய்யை வழங்க ஈரானிய கம்பனி இணக்கம் தெரிவித்தது.

இவ்வாறு ஈரானுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இதனை மேலும் ஒரு வருட காலத்துக்கு தற்போது பெற்றுக் கொள்ளும் அதே அடிப்படையில் பெற்றுக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக சவூதி அரேபியாவிலிருந்தும் 1,35,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய்யை கொள்முதல் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. 30 நாட்கள் வட்டியில்லா கடன் அடிப்படையில் சவூதி எண்ணெய்க் கம்பனியிலிருந்து கொள்முதல் செய்யப்படவுள்ளது.

ஈரானிய தேசிய எண்ணெய்க் கம்பனியுடனான ஒப்பந்தத்தை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் செப்டம்பர் முதலாம் திகதி செய்து கொள்ளவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி முடிவடையவுள்ளது.

பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்துக்கே அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக