20 ஆகஸ்ட், 2010

வேறுபாடுகளிருந்தாலும் ஐ.நாவுடன் இணைந்து பணியாறுவதற்கு தயார்-அமைச்சர் பசில்


இடம்பெயர்ந்த மக்களை பராமரிக்கும் செயற்பாடுகள் மற்றும் மீள்குடியேற்ற விடயங்கள் என்பனவற்றில் ஐக்கிய நாடுகள் சபை அதன் முகவர் நிலையங்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன பாரிய பங்களிப்பை வழங்கின. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையுடன் வேறுபாடுகள் காணப்பட்டாலும் இலங்கை அரசாங்கம் அதனுடன் இணைந்து பணியாற்ற தயாராகவுள்ளது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபை அதன் முகவர் நிலையங்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவிகள் கிடைத்திருக்காவிடின் வெற்றி பெற்றிருக்க முடியாது. வேறுபாடுகள் காணப்பட்டாலும் அனைவரினதும் நோக்கம் ஒன்றாகவே இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச மனித நேய தினம் நேற்று நினைகூரப்பட்டதை முன்னிட்டு கொழும்பில் உள்ள ஐ.நா.வின் இலங்கை அலுவகலத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் சபை அதன் முகவர் நிலையங்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன எமக்கு பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளன.

முக்கியமாக எமது நாடு சுனாமி அனர்த்தத்தை எதிர்கொண்டபோதும் மேலும் அதிகளவான மக்கள் வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்தபோதும் இந்த நிறுவனங்கள் எமக்கு உதவி புரிந்துள்ளன. எனவே இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் மக்கள் சார்பில் முக்கியமாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட மனித நேய நிறுவனங்களுக்கு நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

அதாவது ஐக்கிய நாடுகள் சபை அதன் முகவர் நிலையங்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பனவற்றின் ஒத்துழைப்பும் உதவிகளும் கிடைத்திருக்காவிடின் நாங்கள் இன்று பெற்றுக்கொண்டுள்ள சாதனையை அடைந்திருக்க முடியாது.

இடம்பெயர்ந்தோர் விடயத்தில் நாங்கள் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டு அதிக மக்களை மீள்குடியேற்றியுள்ளோம். இன்னும் செய்வதற்கு பல வேலைத்திட்டங்கள் உள்ளன. முக்கியமாக பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவேண்டியவர்களாகவுள்ளனர். இங்கு அமர்ந்திருக்கும் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் 19 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்துள்ளார். எனவே இது தொடர்பில் நாங்கள் செய்யவேண்டிய திட்டங்கள் உள்ளன. இது இலகுவான விடயமல்ல. எனவே இது தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று தெரிவிக்கின்றேன்.

ஐக்கிய நாடுகள் சபை அதன் முகவர் நிலையங்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பனவற்றுடன் அரசாங்கத்துக்கு சில வேறுபாடுகள் இருந்தன. எனினும் நாம் எங்கு பயணிக்கவேண்டும் என்ற இலக்கு தொடர்பில் பொதுவான இணக்கப்பாடு காணப்பட்டது. அனைவரும் பாதிக்கப்பட்ட மற்றும் கஷ்டப்பட்ட மக்களுக்கு உதவவேண்டும் என்ற இலக்கையே கொண்டிருந்தனர். அது தொடர்பில் தெளிவு இருந்தது.

ஆனால் அதனை நாங்கள் எவ்வாறு செய்யப்போகின்றோம் என்பதிலேயே வேறுபாடுகள் காணப்பட்டன. கடந்த காலங்களில் பல சவால்கள் கஷ்டங்கள் என்பனவற்றுக்கு நாம் முகம்கொடுத்தோம். அதாவது மெனிக் பாம் பகுதியில் இடம் பெயர்ந்த மக்களுக்கு உறுதியான வீடுகளை அமைத்தபோது பல விமர்சனங்களை நாங்கள் எதர்கொண்டோம். அதாவது அந்த மக்களை நீண்ட காலத்துக்கு மீள்குடியேற்றாமல் இருப்பதற்கு அரசாங்கம் கருதுவதாக பொய்யான விமர்சனத்தை முன்வைத்துடன் குப்பைத் தொட்டி ஒன்றைக் கூட உதவியாக வழங்காத சந்தர்ப்பங்கள் இருந்தன. எனினும் தற்போது அனைவருக்கும் உண்மைகள் புரிந்திருக்கும்.

மனிதநேய செயற்பாடுகளின்போது நாங்கள் பலவற்றை இழந்தோம். உயிர்களை இழந்தோம். அண்மையில்க்கூட நிலக்கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்ட சமயத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் எங்களுக்காக தனது உயிரை தியாகம் செய்துள்ளார். அதனை இந்த சந்தர்ப்பத்தில் வருத்தத்துடன் நினைவுகூருகின்றேன்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையானது செயற்பாட்டு உறுப்பினராக அங்கம் வகிக்கின்றது. எனவே உங்களுடன் இணைந்து செயற்பட நாங்கள் தயாராக இருக்கின்றோம். வேறுபாடுகள் காணப்பட்டாலும் எமது இலக்கை அடைந்து கொள்வதில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றோம். அனைவரும் சகல வசதிகளுடனும் சௌகரியத்துடனும் ஒற்றுமையாகவும் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவதே எமது இலக்காகும். அந்த இலக்கை அடைவதில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கின்றோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக