20 ஆகஸ்ட், 2010

சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவில் இராணுவ நீதிமன்ற தீர்ப்பு குறித்து முறையிடுவோம்: ஐ.தே.க

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு இலங்கை இராணுவ நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துவது தொடர்பாக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவர்த்தைகளை நடத்தி வருகின்றார் என்று கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

தீர்ப்பை எதிர்த்து ஜெனீவாவிலுள்ள சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்போவதாகவும் அவர் கூறினார். கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவத் தீர்ப்பு நியாயமற்றது. இதனை ஐ.தே. கட்சி கடுமையாகக் கண்டிக்கின்றது. இத்தீர்ப்பில் எமக்கு திருப்தியில்லை. இராணுவ நீதிமன்றத்தால் இலங்கையின் சட்ட வரையறைக்கு சமாந்தரமான எதுவிதமான விசாரணைகளும் நடத்தப்படவில்லை.

இத்தீர்ப்பினால் சரத் பொன்சேகாவின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாது வாழ்வாதாரமான ஓய்வூதியமும் நிறுத்தப்பட்டுள்ளது. இது பிழையான செயற்பாடாகும். ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதால் அக்குடும்பத்தினரது வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுள்ளது.

எனவே இத்தீர்ப்பை எதிர்த்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஜே.வி.பி. கட்சி அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் இது தொடர்பாக எமது தலைவர் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். அதன் பின்னர் கூட்டாக ஒன்றிணைந்து நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளோம். சரத் பொன்சேகாவுக்கு தண்டனை வழங்குவதற்காகவே இராணுவ நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டது.

இதன் விசாரணைகள் எதுவும் பகிரங்கப்படுத்தப்படவில்லை அனைத்தும் இரகசியமாகவே உள்ளது. ஓய்வு பெற்ற பின்னர் தமக்குத் தேவையான தொழிலை எவராலும் தேர்ந்தெடுக்க முடியும். இதற்கு தடை விதிக்க முடியாது. இராணுவ நீதிமன்றத்தில் சாட்சியமளித்த எமது கட்சி எம்.பி. யான லக்ஷ்மன் செனவிரத்ன, ஓய்வு பெற்ற பின்பு அரசியலில் ஈடுபட தயாரென சரத் பொன்சேகா கூறியதாகவே சாட்சியமளித்துள்ளார். இதனை அவர் எமது பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது தெரிவித்தார்.

இன்று அரச அதிகாரிகள் நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். தேர்தல் காலங்களில் இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள் பகிரங்கமாக மேடைகளில் உரையாற்றினார்கள். அப்படியென்றால் இதுவும் பிழையான செயற்பாடு அல்லவா. ஏன் அப்படியென்றால் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக