14 ஜூலை, 2010

நடிகர்,நடிகைகள் இலங்கை செல்வது குறித்து ஆலோசனை : சரத்குமார்



தென்னிந்திய நடிகர், நடிகைகள் இலங்கை செல்வது பற்றி செயற்குழுவில் ஆலோசிப்போம் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளளார்.

இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடந்த போது நடிகர் சங்கம் கண்டித்தது. அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நடிகர், நடிகைகளிடம் நிதி திரட்டியும் அனுப்பி வைத்தது. இலங்கை அரசைக் கண்டித்து படப்பிடிப்புக்காக, அந்நாட்டுக்கு செல்லக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.

தற்போது அங்கு போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் தமது உடைமைகளை இழந்து முகாம்களுக்குள்ளே முடங்கியுள்ளனர். போரில் பெற்றோரை இழந்த தமிழ்க் குழந்தைகள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் 'ரெடி' படப்பிடிப்புக்குச் சென்ற அசின் இரு தினங்களுக்கு முன் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களை நேரில் சந்தித்தார்.

இலங்கை சென்ற அசின் மீது, நடிகர் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்,

"நடிகர், நடிகைகள் அனைவரும் இலங்கை செல்வது பற்றி நடிகர் சங்க செயற்குழுவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும். ஈழத் தமிழர்களுக்கு நேரில் வந்து உதவிகள் செய்யும் படி எனக்கு நிறைய கடிதங்கள் வந்துள்ளன. அவற்றை நடிகர் சங்க செயற்குழுவில் சமர்ப்பிப்பேன்.

தமிழ் நடிகர், நடிகைகளுக்கு உலகளாவிய அளவில் அங்கீகாரம் உள்ளது. இலங்கையில் நடந்த சர்வதேச படவிழாவுக்கு செல்லக்கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டது.

அசின் தொழில் ரீதியாகத்தான் இலங்கை போயிருக்கிறார். எனவே நடவடிக்கை எடுக்கும் முடிவை மறுபரிசீலனை செய்வோம் "என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக