14 ஜூலை, 2010

நிரந்தர இராணுவ முகாம்கள் வடக்குகிழக்கில் அமைக்கப்படும்-பாதுகாப்பு செயலாளர்

விடுதலைப் புலிகளுக்கு கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்தே ஆயுதங்களும், பயிற்சிகளும் வழங்கப்பட்டன. எனவே, எதிர்வரும் காலங்களில் எந்தவொரு வெளிநாடுகளில் பயிற்சிகள் பெற்ற குழுவையும் இலங்கைக்குள் ஊடுருவ இடமளிக்கப்போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். அமைவாக நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்தி புலனாய்வு துறை வலுப்படுத்தப்படும். அத்தோடு வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிரந்தர இராணுவ முகாம்களும் அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வன்னி 61ஆவது பாதுகாப்பு படையணியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விஷேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கை போர் சூழலை கடந்து தற்போது புதிய ஒரு சந்தர்ப்பத்தில் காலடியெடுத்து வைத்துள்ளது. பாரிய தியாகங்களுக்கு மத்தியில் நாம் பெற்றுக் கொண்ட பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றியை நிரந்தர வெற்றியாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எதிர்வரும் காலங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட இடமளிக்க கூடாது.

இதற்கு அமைவாக எமது பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். இலங்கயில் வன்னிப் பிரதேசம் என்பது மிகவும் முக்கியமானதொரு பிரதேசமாகும். ஏனெனில் கடந்த காலங்களில் பயங்கரவாதிகள் இப்பிரதேசங்களில் காணப்படும் காட்டுப் பகுதிகளிலேயே பயற்சிகளைப்பெற்று வந்தனர். எனவே, எமது பாதுகாப்பு பிரிவுகள் இப்பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

நிரந்தர முகாம்களை அமைத்து நிலையான பாதுகாப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளில் எமது பாதுகாப்பு படைகள் மூன்று மடங்கில் வலுப்பற்றுள்ளது.தற்போது நாட்டில் போர் சூழல் இல்லாமையால் எமது படைகளை தொழில்சார் நிபுணத்துவம் உடையவர்களாக மாற்றியமைக்க வேண்டும். இராணுவச் சட்டம் தொடர்பாக கூடிய பயிற்சிகள் வழங்கப்படல் வேண்டும். தாம் எந்த சட்டத்திற்கு கீழ் செயற்பட வேண்டும் என்பதை முப்படைகளின் அதிகாரிகளும் ஏனைய சிப்பாய்களும் கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் வடக்கு பிரதேசங்களில் கடமைகளில் ஈடுபடும் பொது மக்களுடன் முறையாக நடந்துகொள்ள வேண்டும். நிரந்தர முகாம்கள் வன்னி பிரதேசங்களில் அமைக்கப்பெறுவது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே தவிர பொதுமக்களுக்கு இடையூறாக அமையக் கூடாது. பயங்கரவாதிகளின் கடந்த கால செயற்பாடுகளையும் அவர்களின் வளர்ச்சியையும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் எதிர்காலங்களில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களுக்கும், பயங்கரவாத பிரச்சினைகளுக்கும் சரியான வகையில் முகம் கொடுக்க முடியும். ஆயுதங்கள் சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவருவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஏனெனில் இவ்வாறான ஊடுருவல்களே பயங்கரவாத பிரச்சினைகளுக்கு வித்ததாக அமையும் எனக் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக