8 டிசம்பர், 2010

வெளிநாட்டு அழுத்தங்களை பொருட்படுத்தாது நாட்டு நலனை கருதி முடிவுகளை எடுத்தவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஜனாதிபதி


வெளிநாட்டவர்களின் அழுத்தங்களைப் பொருட்படுத்தாது நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன்களை முன்நிறுத்தியே முன்னாள் பிரதமர் மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா முடிவுகளை எடுத்தார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

உலகின் முதலாவது பெண் பிரதமராக மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா பதவியேற்றதன் ஐம்பதாவது ஆண்டு நினைவு விழா நேற்று கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொழும்பு – 7லுள்ள ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், முன்னாள் பிரதமரான மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா உலகின் முதலாவது பிரதமராக நியமனம் பெற்றமை இலங்கைக்கு மாத்திரமல்லாமல் முழு உலகுக்குமே பெரும் கெளரவமாகும்.

இதன் மூலம் முழு பெண் சமுதாயத்திற்கும் கெளரவமும் அந்தஸ்தும் கிடைக்கப்பெற்றது. எமது மறைந்த பிரதமர் ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவை முன்மாதிரியாகக் கொண்டுதான் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் மாகிரட் தட்சர் போன்றோர் பிரதமர்களாக உருவாகினர்.

முன்னாள் பிரதமரான மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தான் அரச தலைமைப் பதவியான பிரதமர் பதவியைப் பொறுப்பெடுத்தார். 1956ம் ஆண்டில் முன்னாள் பிரதமரான மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா விட்டுச் சென்ற இடத்திலிருந்து தமது அரசியல் பணிகளை முன்னெடுத்தார்.

அவர் ஒரு முன்மாதிரிமிக்க அரசியல் தலைவராக மாத்திரமல்லாமல் அன்பு நிறைந்த சிறந்த தாயாகவும் விளங்கினார். இவர் வெளிநாட்டு அழுத்தங்களைப் பொருட்படுத்தாது நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலன்களை முன்நிறுத்தி தீர்க்கமான முடிவுகளை எடுத்தார். குறிப்பாக பாடசாலைகள், பெற்றோலிய நிறுவனம், காப்புறுதி நிறுவனம் என்பவற்றை அரச உடைமையாக்கினார்.

காணி உச்ச வரம்பு சட்டத்தை அறிமுகப்படுத்தினார். இவ்வாறான நடவடிக்கைகளை கண்டு, கோதுமை மாவுக்கு வழங்கிவரும் மானியத்தை நிறுத்தப்போவதாக வெளிநாட்டினர் அச்சுறுத்தினர். இருப்பினும் அந்த அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாது தமது தீர்மானங்களை துணிகரமாக முன்னெடுத்தார்.

காணி உச்ச வரம்பு சட்டத்தின் மூலம் தமக்கு நஷ்டம் ஏற்படுவதையும் பாராது நாட்டு மக்களின் நலன் கருதி அச்சட்டத்தை செயலுருப்படுத்தினார்.

இவற்றின் விளைவாக சில சக்திகள் அவருக்கு எதிராக செயற்பட்டன. இருப்பினும் நாட்டின் ஏழை மக்களின் நலன்களை கருத்திற்கொண்டே தமது அனைத்து முடிவுகளையும் அவர் எடுத்தார்.

அவரது அரசியல் ஞானம், வெளிநாட்டுக் கொள்கை என்பவற்றை மதிக்கின்றோம். அவரது இந்த கொள்கையின் பயன்களை இன்றும் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.

நாம் வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அன்று சிறுகுழந்தைகளாக இருந்து முன்னாள் பிரதமரான மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை வரவேற்றவர்கள் இன்று அந்தந்த நாடுகளின் தலைவர்களாக விளங்குகின்றனர்.

அவர்கள் மறைந்த முன்னாள் பிரதமரை நினைவு கூருகின்றனர்.

மறைந்த முன்னாள் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் அரசியல் நோக்கங்களை பின்பற்றி அவர் தலைமை வகித்த ஸ்ரீல.சு. கட்சியைக் கட்யெழுப்பவென நாம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

நான் தேர்தலில் போட்டியிட 1970ல் வேட்பு மனு குழுவுக்கு முன்பாக நேர்முகப் பரீட்சைக்குச் சென்றிருந்த சமயம் அங்கிருந்த அன்றைய சிரேஷ்ட அமைச்சர்கள் என்னை விடவும் எனது சகோதரனை அபேட்சகராக நியமிக்கவே விரும்பினர்.

இருப்பினும் மறைந்த முன்னாள் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா என்னையே அபேட்சகராக நியமிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அந்த நிகழ்வு இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளது.

இதேபோல் என்னை ஹம்பாந்தோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பு பாராளுமன்ற உறுப்பினராக நியமித்த சமயம் நான் மாவட்ட செயலாளரிடம் பதவியைப் பொறுப்பெடுக்க சென்ற சமயம், மறைந்த முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தொலைபேசி ஊடாக மாவட்ட செயலாளருடன் தொடர்புகொண்டு ‘மஹிந்தவை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கூறினார். இவ்வாறு தான் ஏனையவர்களுடனும் அவர் அன்பாகவும், ஒரு சிறந்த தாயாகவும் நடந்துகொண்டார்.

அவர் பிரதமராக பதவியேற்ற ஐம்பதாவது ஆண்டு பூர்த்தியாகும் இந்த சந்தர்ப்பத்தில் அவரது வழிகாட்டல்களை பின்பற்றி தாய்நாட்டின் அபிவிருத்திக்காகவும், சுதந்திரத்திற்காகவும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க எமது அரசாங்கமும், கட்சியும் ஒருபோதும் பின்னிற்காது என்றார்.

இந்நிகழ்வின்போது முன்னாள் பிரதமர் மறைந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தொடர்பான நூலொன்றும் வெளியிடப்பட்டது.

இந்நூலின் முதல் பிரதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கி வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க, சுனேத்திரா பண்டாரநாயக்கா, பிரதமர் டி.எம். ஜயரட்ன, அமைச்சர்கள் ஏ. எச். எம். பெளஸி, ரவூப் ஹக்கீம், மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேம ஜயந்த், பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, பிரதியமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார் கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக