இலங்கை பணிப்பெண் ரிசானா நஃபீக்கிற்கு சவூதி அரேபிய நீதிமன்றம் விதித்துள்ள மரண தண்டனை இடைநிறுத்தப் பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக் கிணங்க சவூதி அரேபியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா நேற்று (07) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை பணிப்பெண்ணான ரிசானா நஃபீக்கிற்கான தண்டனை உள்ளிட்ட விடயங்கள் ஷரீஆ சட்டத்திற்கிணங்கவே முன்னெடுக்கப்படுகின்றன. அந்நாட்டு மன்னருக்குக் கூட அதனைமீறி செயற்பட முடியாத நிலை உள்ளது.
எனினும் அவரது விடுதலைக்கான சகல முயற்சிகளையும் அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் டிலான் பெரேரா கூறியதாவது,
“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்கள் முகங்கொடுக்கும் நெருக்கடிகளைத் தடுப்பதற்கு விசேட செயற்திட்டங்கள் அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன் ஒரு அம்சமாக வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களைப் போன்றே அதன் கீழ் இயங்கும் உப முகவர் நிலையங்களையும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
முகவர் நிலையங்களுக்கு கீழ் இயங்கும் உப முகவர் நிலையங்களையும் பணிய கத்தில் பதிவதற்கு அடுத்த வருடம் முதல் புதிய நடைமுறையொன்று அமுல்படுத்தப்படும்.
அதேவேளை, தொழிற்பயிற்சிகளை வழங்கவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுவோருக்கு மாவட்ட ரீதியில் வழங்கப்படும் பயிற்சிகளுக்கு மேலதிகமாக மூன்று நாள் விசேட பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் அவர்களுக்கான நலன்புரி திட்டங்கள் பல செயற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் பணிப்பெண்கள் விமான நிலையத்திலும் பணிப்பெண்கள் போன்றே நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கான வரவேற்பும் திருப்திகரமாக இல்லை.
அவர்களுக்கு உரிய மதிப்பை வழங்கி சிறந்த வரவேற்பளிக்கவென விசேட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர்களை இனங்காணபதற்கென விசேட அடையாள அட்டையொன்றும் வழங்கப்படும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக