தனது பயணத்தை தடுக்கவும் கைது செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் கிடைத்த நிலையில் அவை எதற்கும் அஞ்சாது தைரியமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானிய பயணத்தை மேற்கொண்டதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
பிரித்தானிய பயணத்தை ரத்துச் செய்யுமாறு சிலர் ஜனாதிபதியை கோரிய போதும், தான் தவறு எதுவும் செய்யவில்லை எனவும் பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து தாய் நாட்டை மீட்டது தவறு எனின் அதற்காக சிறை செல்லவும் தயார் என்றும் மன தைரியத்துடன் ஒக்ஸ்போர்ட் சங்க அழைப்பை அவர் ஏற்றதாக அமைச்சர் கூறினார்.
வெளிவிவகார அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது:-
நமது ஜனாதிபதி பயந்தாங்கொள்ளியல்ல. சவால்களுக்கு தைரியமாக முகம் கொடுப்பவர். அவர் ஒரு போதும் சவால்களில் இருந்து தப்பி ஓடுபவரல்ல. அதனாலே ஒக்ஸ்போர்ட் சங்க அழைப்பை ஏற்று பிரித்தானியாவுக்கு சென்றார்.
தனது பிரித்தானிய பயணத்தை தடுக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படு வதாக முன்கூட்டியே ஜனாதிபதி அறிந்திருந்தார். புலி ஆதரவாளர்கள் பெருமளவு நிதி செலவிட்டு ஜனாதிபதியின் உரையை தடுக்க முயற்சி செய்தனர். பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ் ஆகிய நாடுகளில் இருந்து புலி ஆதரவாளர்கள் அழைத்து வரப்பட்டனர்.
தனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி நடப்பதாக அறிந்திருந்த போதும் அவர் அதற்கு முகம் கொடுக்க அஞ்சவில்லை. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக உரையினூடாக சர்வதேச சமூகத்திற்கு கருத்துக் கூற அவர் விரும்பினார்.
ஆனால், புலி ஆதரவாளர்களின் அழுத்தம் காரணமாக ஜனாதிபதியின் உரை ரத்துச் செய்யப்பட்டது. இது தொடர்பில் ஒக்ஸ்போர்ட் சங்கம் விளக்கமளித்து கடிதமொன்றை அனுப்பியது.
உங்களது உரையை கேட்க ஆவலாக இருந்தோம். ஆனால் பாதுகாப்பு தொடர்பில் கிடைத்த தகவலின்படி உங்கள் உரையை ரத்துச் செய்ய நேரிட்டது. நீங்கள் பல்கலைக்கழகத்திற்கு வருகையில் ஆர்ப்பாட்டம் நடத்த தயாராவதாக தகவல் கிடைத்தது. பொலிஸாரிடம் பாதுகாப்பு கோரினோம். ஆனால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் இதனால் குழப்பம் ஏற்படலாம் எனவும் பொலிஸார் கூறியதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்சுறுத்தல் இருந்தும் தைரியமாக பிரித்தானியாவுக்குச் சென்ற ஜனாதிபதி குறித்து நாம் பெருமையடைகிறோம்.
யுத்த குற்றச் சாட்டு குறித்து விசாரணை செய்ய வேண்டுமென்று கூறிய கரு ஜயசூரிய தான் அவ்வாறு கூறவில்லை. தலைப்பில் தான் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக தற்பொழுது கூறுகிறார். எல். ரி. ரி. ஈ. கொடியை தூக்கி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை பாதுகாக்க அவர் முயல்கிறார். புலி ஆதரவாளர்களை திருப்திப்படுத்தவே அவர் யுத்தக் குற்றச்சாட்டு பற்றி அறிக்கை விட்டுள்ளார். இது பெரும் துரோகமாகும். ஜனாதிபதிக்கு எதிரான இந்த சதி நாட்டுக்கு செய்த அவமதிப்பாகும். இவ்வாறு அமைச்சர் ஜி. எல். பீரிஸ் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக