30 ஆகஸ்ட், 2010

நிருபமா ராவ் இன்று இலங்கை பயணம்







இலங்கையில் தமிழர் பகுதிகளில் மறுவாழ்வுப் பணிகளைப் பார்வையிடுவதற்காக இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ்

3 நாள் பயணமாக இலங்கைக்கு திங்கள்கிழமை செல்கிறார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போர் முடிந்து ஓராண்டுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை அவர் நேரில் ஆய்வு செய்யவுள்ளார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய பகுதிகளுக்கு நிருபமா ராவ் செல்கிறார். தமிழர்களுக்கு வீடு கட்டித் தரும் இந்திய அரசின் திட்டம் குறித்தும் இந்தப் பயணத்தின் போது அவர் ஆய்வு செய்ய உள்ளார்.

தமிழ் தேசிய கூட்டணி எம்.பி.க்களை கொழும்பில் புதன்கிழமை (செப்டம்பர் 1) சந்தித்து அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். அடுத்த மாத இறுதியில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கை செல்ல உள்ள நிலையில், நிருபமா ராவின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

இலங்கையில் நிவாரணப் பணிகளுக்காக இந்திய அரசு 500 கோடியை வழங்கியது.

ஆனால், அங்கு மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக நடைபெறவில்லை எனவும், போரினால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் முகாம்களில் வாழ்வதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உண்மை நிலையைக் கண்டறிய சிறப்புப் பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் கருணாநிதி ஆலோசனை தெரிவித்திருந்தார்.

அவரது ஆலோசனையை ஏற்றுக்கொண்டு, இலங்கைக்கு மத்திய அரசின் உயர் அதிகாரி அனுப்பப்படுவார் என்று மன்மோகன் சிங் அறிவித்தார்.

முன்னதாக, முதல்வர் கருணாநிதியை சென்னையில் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி நேரில் சந்தித்து நிருபமா ராவ் இதுதொடர்பாக பேச்சு நடத்தினார்.

அப்போது, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வேளாண் நிலங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகியவற்றை சீரமைத்து இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது குறித்தும், முகாம்களில் உள்ள தமிழர்களை மறுகுடியமர்வு செய்வது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக