30 ஆகஸ்ட், 2010

சமய நிலையங்களை மையமாக்கி கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படும் பிரதமர் தெரிவிப்பு




அனைத்து சமய நிலையங்களையும் மையமாகக் கொண்ட கிராம அபிவிருத்தியை ஏற்படுத்தும் தேசிய வேலைத் திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும், இந்தத் திட்டத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

சமய அபிவிருத்தி மற்றும் அனைத்து சமய நிலையங்களையும் மேம்படுத்துவது தொடர்பான தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்ட வேலைத் திட்டத்தை கதிர்காமம் கிரிவிஹாரை வளவில் கடந்த வெள்ளிக்கிழமை (27) ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

சகல கிராமங்களிலும் சமயத்தலைவர், கிராம சேவகர், சமுர்த்தி அதிகாரி, விவசாய அதிகாரி உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுடன் கூடிய குழுவொன்றை அமைத்து அதன் மூலம் கிராமத்தை அபிவிருத்தி செய்வதே உத்தேசத் திட்டத்தின் நோக்கமென்று பிரதமர் அங்கு சுட்டிக்காட்டினார். பெளதிக வளங்களினால் மட்டும் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்து சிறப்பான பயனை பெறமுடியாது. அதற்கு சமயம் மூலமான அபிவிருத்தியும் சேர்ந்தால்தான் உண்மையான பயனைப் பெறமுடியும்.

ஒருசிலர் தமது பிறப்பு சான்றிதழில் மட்டும் தமது சமயத்தைக் குறிப்பிடுகின்றனர். இதுபல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

30 வருடங்கள் இந்நாட்டில் தமக்குத் தேவையான சமயத்தை முன்னெடுக்க சுதந்திரம் இல்லாமல் இருந்தது. எதிர்காலத்தில் அவ்வாறு ஏற்படாதவாறான சமய சூழலை கட்டியெழுப்புவது அவசியமாகும்.

இந்நிலையில் கஷ்டப் பிரதேசங்களில் உள்ள அனைத்து சமய நிலையங்களையும் மேம்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகள் கிடைத்துள்ளதாகக் கூறிய பிரதமர், அவற்றில் பலயோசனைகளை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளதாகவும் கூறினார்.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் வேந்தரும் கிரிவிஹாரையின் விகாராதிபதி யுமான அலுத்வெவ சோரத தேரர், ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக