30 ஆகஸ்ட், 2010

துறைமுக அதிகார சபை ஏல விற்பனை: பாதாள உலக கோஷ்டியின் மிரட்டல் பொலிஸ், இராணுவத்தால் முறியடிப்பு

துறைமுக அதிகார சபையின் ஏல விற்பனை நடவடிக்கைகள் கடந்த வார இறுதியில் இடம்பெற்றபோது பொலிஸாரும் இராணுவமும் இணைந்து மேற்கொண்ட முற்றுகையின் போது பாதாள உலகத்துடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் பாதாள உலக தொடர்புகளுடன் கூடியவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேற்படி ஏல விற்பனையை பாதாள உலக கோஷ்டியொன்று தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தகவலொன்று கிடைத்துள்ளது. அதனையடுத்து அவர் படையினருக்கும் பொலிஸாருக்கும் ஏல விற்பனை சுமுகமாக நடைபெறும் சூழலை ஏற்படுத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளார். அதனையடுத்தே மேற்படி முற்றுகை இடம்பெற்றுள்ளது.

ஏல விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களின் விலைகள் குறிப்பிட்ட பாதாள உலக கோஷ்டிக்கு முன்னரே கிடைத்ததாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மிரட்டல் நடவடிக்கைகள் மூலம் அப்பொருட்கள் தமக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் பாதாள கோஷ்டியினர் செயற்பட்டதாக கூறப்படுகிறது. பாதாள கோஷ்டியினர் குறிப்பிடும் விலையை விட அதிகமாக கேட்பவர் தாக்கப்படுவார் அல்லது அந்த இடத்தில் இருந்து விரட்டப்படுவார் அல்லது அவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படும்.

பொருட்களைக் குறைந்த விலைக்கு இவ்வாறு பெற்றுக்கொள்ளும் பாதாள கோஷ்டி துறைமுகத்துக்குள்ளேயே அப்பொருட்களை மீண்டும் அதிக விலைக்கு விற்று விடுகின்றது.

கடந்த வார இறுதியில் இடம்பெற்ற ஏல விற்பனை மூலம் கிடைத்த வருமானம் கடந்த 20 வருடங்களில் பெற்ற மிகப் பெரிய வருமானமாகும்.

எதிர்கால துறைமுக ஏல விற்பனையின் போது பாதுகாப்புப் படையினரும் பொலிஸாரும் காவல் பணிகளில் ஈடுபட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

துறைமுக ஏல விற்பனையின் போது பாதாள உலக கோஷ்டியினரின் மிரட்டல் நடவடிக்கைகளால் அரசாங்கம் கோடிக்கணக்கான ரூபா வருமானத்தை இழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக