30 ஆகஸ்ட், 2010

“கவர்ச்சிகரமான பேச்சை விடுத்து இலங்கை தமிழர்களுக்கு உதவுங்கள்” தமிழக தலைவர்களுக்கு பத்மநாதன் வேண்டுகோள்



விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் கேபி என்கிற பத்மநாதன். கைது செய்யப்பட்ட இவர் இலங்கை ராணுவ காவலில் உள்ளார். இவர் ஒரு பத்திரிகைக்கு டெலிபோனில் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது எங்களுக்கு (இலங்கை தமிழர்களுக்கு) சமரசத்துடன் கூடிய இணக்கமான சூழ்நிலையும்,, ஒற்றுமையும்தான் தேவை. அதை விடுத்து எதிர்க்கும் போக்கு மற்றும் மனக் கசப்பு போன்றவை தேவையில்லை.

தற்போது நான் கைது செய்யப்பட்டிருந்தாலும், போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மறுவாழ்வு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் சமூக சேவகராக உள்ளேன். இந்த நிறுவனம் இலங்கை அரசின் ஆதரவுடன் செயல்படுகிறது.

தற்போது நான் டெலிபோன், இ மெயில், பேக்ஸ் போன்றவற்றை பயன்படுத்துகிறேன். எங்கள் மக்களுக்கு தற்போது அரசியல்வாதிகள் தேவையில்லை. மனிதாபி மானிகள் தான் தேவை.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கானவர்கள் தற்போது மறுவாழ்வு, மற்றும் மறு சீரமைப்பு சிறப்பு முகாம்களில் உள்ளனர். அவர்களின் வாழ்வு மீண்டும் நல்ல முறையில் அமைய வேண்டும். அதற்கான அனைத்து வசதிகளையும் இலங்கை ராணுவ செயலாளர் கோதபயராஜ பக்சே செய்து உதவி வருகிறார்.

கைது செய்யப்பட்டு சிறப்பு முகாம்களில் இருக்கும் அவர்களை இன்னும் 6 மாதங்களில் விடுவிப்பதாக தெரிவித்துள்ளார். வட கிழக்கு மாகாண மறுவாழ்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது.

அகதிகளின் குழந்தைகள் கல்வி பயில பள்ளிகளுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. போரில் அனாதையான குழந்தைகளை பராமரிக்க வவுனியாவில் அன்பு இல்லம் தொடங்க திட்டமிட்டுள்ளது. மேலும் சண்டையின் போது கை, கால்கள் மற்றும் பார்வை இழந்தவர்களும் இங்கு பராமரிக்கப்பட உள்ளனர்.

போரில் காயம் அடைந்த வர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக வவுனியா அருகே ஒரு மாதிரி கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 200 ஏக்கர் பரப்பளவில் ஒரு பண்ணை தொடங்க திட்டமிடப் பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள விடுதலைபுலிகளின் வாழ்வை சீரமைக்க அங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளன. இது கிளிநொச்சி அல்லது வவுனியாவில் அமைக்கப்படும் போரில் விடுதலைப்புலிகள் தோல்வி அடைந்தால் எங்கள் மக்களையும் (இலங்கை தமிழர்களை) இயக்கத்தையும் பாதுகாக்கும் பொறுப்பை பிரபாகரன் என்னிடம் ஒப்படைத்துள்ளார். அந்த கடமையை நான் செய்து வருகிறேன்.

இந்த நிலையில் இலங்கை தமிழர்கள் குறித்து தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் தேவையற்ற அலங்கார கவர்ச்சிகரமான வார்த்தைகளால் வீணாக பேச வேண்டாம். எங்கள் வாழ்வுக்கு தேவையான ஆக்க பூர்வமான உதவிகளை செய்யுங்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக