30 ஆகஸ்ட், 2010

முன்னேஸ்வர மிருக பலிக்கு பொலிஸாரும் உடந்தை : தேசிய பிக்கு முன்னணி

சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்தரகாளி அம்மன் கோவிலில் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட மிருக பலி பூசையினைத் தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பொலிசார் அதிகமான மிருகங்கள் பலியிடப்படுவதற்கு உந்துசக்தியாக இருந்தனர் என தேசிய பிக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஹெடில்லே விமலசார தேரர் தெரிவித்துள்ளார்.

மிருக பலி பூசைக்கு எதிராக தேசிய பிக்கு முன்னணி ஏற்பாடு செய்த அமைதியான பாதயாத்திரைக்கும், சத்தியாக்கிரகத்திற்கும் இடையூறு விளைவித்து பொலிசார் நடந்து கொண்ட விதம் அனுமதிக்க முடியாத ஒன்று என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"இந்து மதத்தின் பெயரால் சிலாபம் முன்னேஸ்வரம் காளி கோவிலில் கடந்த புதன்கிழமை அதிக எண்ணிக்கையிலாக ஆடுகளும், கோழிகளும் பலியிடப்பட்டுள்ளன.

பௌத்த விகாரைக்குச் சொந்தமான இடம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கோவிலில் இவ்வாறான சம்பவம் வருடந்தோரும் இடம்பெற்று வருகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

சமயத்தின் பெயரால் செய்யப்படும் இவ்வாறான பாவச் செயலைத் தடுத்து நிறுத்துமாறும், இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறும் கோரி பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினோம். அப்போது பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்காவுடன் கலந்துரையாட சந்தர்ப்பமும் ஏற்படுத்தித் தரப்பட்டது.

இந்து காங்கிரஸ் செயலாளர் கந்தய்யா நீலகாந்தனும் அந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.

இந்தச் செயலை நிறுத்துவதற்கு வேண்டிய சட்ட விடயங்கள் தொடர்பில் நாம் அவருக்கு விளக்கினோம். அப்போது, இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர் எமக்குத் தெரிவித்தார். பின்னர் நாம் சிலாபம் பொலிசிலும் ஒரு முறைப்பாட்டைச் செய்தோம்.

மிருக பலி பூசையினை நிறுத்தாவிட்டால் நாம் அமைதியான பாத யாத்திரை ஒன்றையும், சத்தியாக்கிரகப் போராட்டத்தையும் அவ்விடத்தில் நடத்துவோம் எனவும் அந்த முறைப்பாட்டில் தெரிவித்திருந்தோம்.

எனினும் பொலிசார் இதனை நிறுத்துவதற்குப் பதிலாக அந்தச் செயலுக்குப் பாதுகாப்பு வழங்கியதுடன் எமது பாதயாத்திரைக்கும், சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கும் இடையூறு விளைவித்தனர்.

எமக்கு அவ்விடத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும் எந்த நோக்கமும் இல்லை என நாம் பொலிசாருக்குத் தெரிவித்த போதும் எம்மைத் தடுக்க பொலிசார் யுத்தமொன்றுக்கு வருவதுபோல வந்தனர்.

இந்த மிருக பலி பூசையினை நடத்துவதற்குப் பின்னணியாக அப்பிரதேசத்தின் மிருக பண்ணை நடத்துவோர் இருந்துள்ளனர். பௌத்த விகாரை ஒன்றுக்கருகில் பூக்கள் விற்கப்படுவது போல அவர்கள் இங்கு பலிக்காக மிருகங்களை விற்பனை செய்கின்றனர். இவ்வாறு பலியிடப்படும் மிருகங்களை வாங்க ஒரு பிரிவினர் உள்ளதாக அறிந்தோம்.

இந்தச் செயலை நடத்த அனுமதிப்பதானது பௌத்த நாடான இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்து மதத்திற்கும் இழிவுடன், அவமரியாதையையும் ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக