பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், அமெரிக்க நிறுவனம் ஒன்றில் ஆலோசகராகிறார். இந்தியவாழ் அமெரிக்கரான வினோத் கோஸ்லா உருவாக்கியுள்ள நிறுவனத்தில் பிளேர் பணியில் சேர உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. பிரிட்டிஷ் பிரதமராக இருந்தபோது தனக்குக் கிடைத்த சர்வதேச அளவிலான தொடர்புகள் மூலம் கிடைத்த அனுபவத்தை நிறுவனத்தில் பயன்படுத்துவார்.
இந்நிறுவனத்தை உருவாக்கிய வினோத் கோஸ்லா, ஏற்கெனவே சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தை உருவாக்கிய நிறுவனர்களில் ஒருவராவார்.
""புவி தட்ப வெப்ப நிலை உயர்வைக் கட்டுப்படுத்துவது அரசியல் ரீதியில் தீர்வு காணப்பட வேண்டிய விஷயம் மட்டுமல்ல. அதற்குரிய தொழில் நுட்பங்களை அளிப்பது மிகவும் முக்கியமாகும். இத்தகைய கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆலோசகராக பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கும்,'' என்றார் பிளேர். இவரது நியமனத்தை கோஸ்லா வெஞ்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்து அதை இயக்குநர் கூட்டத்தில் வெளியிட்டுள்ளது.
சுற்றுச் சூழல் கொள்கை சார்ந்த ஆலோசனைகளை பிளேரிடமிருந்து இந்நிறுவனம் கேட்டுப் பெறும்.
2007-ம் ஆண்டு பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தபிறகு, பல நாடுகளில் கெüரவ விரிவுரையாளர் பணியை மேற்கொண்டு வந்தார் பிளேர். தற்போது இந்நிறுவன ஆலோசகராக பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
எதற்கெடுத்தாலும், மேலை நாடுகளைப் பாருங்கள் என்று மேடைக்கு மேடை முழக்கமிடும் நம்மூர் அரசியல்வாதிகள், பதவியிலிருந்து விலகிய பிறகு இதைப் போன்று வேறு பணிகளுக்குச் செல்ல முடியுமா? அல்லது அதற்குரிய தகுதியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்களா? என்பது மிகப் பெரிய கேள்விதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக