26 மே, 2010

இந்தியா இலங்கை ஒப்பந்தத்தில் சர்ச்சை

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்தியாவுக்கு மேற்கொள்ள இருக்கும் விஜயத்தின் போது, இரு நாடுகளிடையே, அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவார் என்று செய்திகள் கூறுகின்றன.

மன்மோகன் சிங்-மஹிந்த ராஜபக்ஷ
இந்தியப் பிரதமருடன் இலங்கை ஜனாதிபதி

ஆனால் ஏற்கனவே கடந்த பத்தாண்டுகளாக அமலில் இருக்கும் இந்திய இலங்கை சுதந்திர ஒப்பந்தம் இந்தியாவுக்கே சாதகமாக இருப்பதாக இலங்கையில் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இது போன்ற ஒரு புதிய ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திடக்கூடாது என்று இலங்கையின் வர்த்தக பிரமுகர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் ஜனாதிபதி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த எதிர்ப்பாளர்களின் பிரதிநிதிகளிடம் பேசிய மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் நலன்களுக்கு எதிரான எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடப்போவதில்லை என்று உறுதியளித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த புதிய ஒப்பந்தத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பு மற்றும், இலங்கை இந்திய சுதந்திர ஒப்பந்தம் குறித்த விமர்சனங்கள் அவ்வளவு சரியானவை அல்ல என்று இலங்கையின் பொருளாதாரப் பகுப்பாய்வாளர் கலாநிதி முத்துக்கிருஷ்ண சர்வானந்தா, கூறுகிறார்.

கடந்த பத்தாண்டு காலமாக அமலில் இருக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்த காலத்துக்கு முன்பே கூட இந்தியாவின், இலங்கைக்கான ஏற்றுமதி அதிகமாகவே இருந்து வந்துள்ளது.

இது சரித்திரரீதியாகவே ,பிரிட்டிஷ் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ள ஒன்று. ஆனால் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் காரணமாக, இந்தியா மற்றும் இலங்கை வர்த்தகத்தில் , ஏற்றுமதி இறக்குமதிக்கிடையே காணப்படும் இடைவெளி குறைந்துள்ளது என்கிறார்.

புதிதாக கைச்சாத்தாகவுள்ள அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதர கூட்டுறவு ஒப்பந்தம்,பொருட்களில் நடக்கும் வர்த்தகத்தைத் தாண்டி, சேவைகளுக்கும் கூட்டுறவை விஸ்தரிக்கும்.

இதன் கீழ், இந்தியா மற்றும் இலங்கை இடையே, மருத்துவ, சட்டத்தரணி போன்ற தொழிற் சேவைகள் பரிமாற்றம் சுதந்திரமாக நடக்க முடியும் என்கிறார் சர்வானந்தா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக