26 மே, 2010

சிறார் போராளிகள் அனைவரும் விடுவிப்பு






பெற்றோருடன் முன்னாள் சிறார் போராளிகள் -ஆவணப்படம்
இலங்கையில் சென்ற ஆண்டு போர் முடிந்த போது பிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த சிறார் போராளிகள் அனைவரும் தற்போது அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்பு இருந்த முன்னாள் சிறார் போராளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த இரண்டு இடங்களும் மூடப்பட்டுவிட்டதாக ஐ நா நிறுவனம் ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.

போரில் பிடிபட்டவர்கள், சரணடைந்தவர்கள், பிறகு மக்களோடு மக்களாக அகதிகள் முகாம்களுக்கு வந்து பின்னர் அடையாளம் காணப்பட்டவர்கள் என சுமார் 10 ஆயிரம் முன்னாள் போராளிகளை இலங்கை அரசு தடுப்பில் வைத்துள்ளது. இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படவில்லை. முறையற்ற இடங்களில் இவர்கள் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையான விடயமாக உள்ளது.


அம்பேபுசாவில் உள்ள முகாமில் முன்பு பயிற்சி பெற்ற முன்னாள் சிறார் போராளிகள்
அம்பேபுசாவில் உள்ள முகாமில் முன்பு பயிற்சி பெற்ற முன்னாள் சிறார் போராளிகள்

இதில் 566 பேர் பிடிபடும் போது 17 வயதுக்கும் குறைவான வயதுடையவர்களாக இருந்தனர். இவர்கள் சமூகத்துக்குத் திரும்பத் தேவையான முழுமையான தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.

ஐ நா ஆமோதிக்கிறது

இந்த முன்னாள் போராளிகளின் பயிற்சிக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி இவர்கள் கண்டுள்ள முன்னேற்றம் தனக்கு மிகுந்த திருப்தியைத் தருவதாக கூறுகிறார்.

ஐநாவின் குழந்தைகள் நிதியமான யுனிசெப் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி, இவர்கள் கல்வியைத் தொடர்வதற்கும் வேலை தேடுவதற்கும் தேவைப்படும் உதவிகளை தமது அமைப்பு செய்யும் என்று கூறியுள்ளார்.

விடுவிக்கப்பட்ட சிறார்களில் 50 பேர் கொழும்பில் ஏற்கனவே அவர்கள் படித்து வந்த பள்ளியிலேயே தமது மேற்படிப்பை தொடரவுள்ளனர். மற்றவர்கள் விடுவிக்கப்படுவதற்காக வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களின் குடும்பங்கள் சில மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவிட்டன. ஆனாலும் சிலரின் குடும்பத்தினர் இன்னமும் முகாம்களில்தான் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக