26 மே, 2010

டெங்கு ஒழிப்பில் அனைவரும் அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் - ஜனாதிபதி


டெங்கு ஒழிப்பு விடயத்தில் ஜனாதிபதி முதல் சாதாரண குடிமகன் வரை அர்ப்பணிப்புடனும், உறுதிப்பாட்டுடனும் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியை நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்து உரையாற்றிய ஜனாதிபதி நாடு பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்த வேளையில் வழங்கிய ஒத்துழைப்பினைப் போன்று, டெங்கு ஒழிப்பிலும் சகலரதும் அர்ப்பணிப்பையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலணியின் கீழ் சகல அமைச்சுக்கள், உள்ளூராட்சி நிறுவனங்களுடன் இணைந்து கட்சி, இன, மத, பிரதேச பேதமின்றி சகலரும் செயற்பட்டால் டெங்கு ஒழிப்பை வெற்றிகொள்வது நிச்சயமெனவும் அவர் தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்பு சம்பந்தமான ஜனாதிபதி செயலணியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, ஏ.எல்.எம். அதாவுல்லா, ஏ.எச்.எம். பெளஸி, ஜோன் செனவிரத்ன, கெஹலிய ரம்புக்வெல்ல, பந்துள்ள குணவர்தன, அநுர பிரியதர்ஷன யாப்பா, பிரதியமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோருடன் மாகாண முதலமைச்சர்கள், ஆளுனர்கள், மாகாண சுகாதார அமைச்சர்கள், பிரதேச செயலாளர்களும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது,

நாடு என்ற வகையில் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கு காலத்துக்குக் காலம் முகங்கொடுத்து அதில் வெற்றிகாணவும் எம்மால் முடிந்துள்ளது. டெங்கு நோயை இல்லாதொழிக்கும் பலம் எம் அனைவருக்கும் உள்ளது. அர்ப்பணிப்புடனும் உறுதிப்பாட்டுடனும் செயற்பாட்டால் இதில் வெற்றிகாண்பது உறுதி.

சுகாதாரத்துறைக்கு நிதி வழங்குவதில் அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்கவில்லை. யுத்தத்தைப் போன்றே சுகாதாரத் தேவைகள் அத்தனைக்கும் போதியளவு நிதியை சகல சந்தர்ப்பங்களிலும் நாம் ஒதுக்கியுள்ளோம்.

எவ்வாறெனினும் டெங்கு விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். ஜனாதிபதி செயலணியுடன் இணைந்து சகல அமைச்சுக்களும் இத்தேசிய செயற்றிட்டத்தில் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். டெங்கு ஒழிப்பில் தமது கடமைகளுக்கு மேலதிகமான அக்கறையை சகலரும் வழங்குவது அவசியம். ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்குவதில் சகலரினதும் பங்களிப்பு அவசியமாகும்.

டெங்கு பாரதூரம் சம்பந்தமாக சகலருக்கும் விழிப்புணர்வூட்டுவதில் ஜனாதிபதி செயலணி முன்னிற்பதுடன், பாடசாலை மாணவர்கள் பெற்றோர்களுக்கும் இதனைத் தெளிவுபடுத்த வேண்டும்.

படித்தோர், படிக்காதோர் மேல் நிலையிலுள்ளோர், வறுமை நிலையிலுள்ளோர் என நுளம்பு பார்ப்பதில்லை. டாக்டர்கள், கல்விமான்கள், சாதாரண மக்கள் என கடந்த ஒருவருட காலத்தில் 340 பேர் டெங்கு நோயினால் மரணமடைந்துள்ளனர்.

மேற்படி செயலணியின் நடவடிக்கைகள் விரைவாக ஆரம்பிக்கப்பட்டு விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் தலைமையில் அமைக் கப்பட்ட இந்த செயலணியில் சுகாதார அமைச்சு கல்வி, இடர் முகாமைத்துவம், மாகாண சபைகள் உள்ளூராட்சி, தகவல் ஊடகத்துறை, பொது நிர்வாக உள்நாட்டலுவ ல்கள், சுற்றாடல் ஆகிய அமைச்சுக்களுடன் உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயல கங்கள், நகர சபைகள், கிராமசேவகர் பிரிவுகள் ஆகியன இடம்பெறுகின்றன. இவற்றுடன் இணைந்த செயற்றிட்டங்கள் உருவாக் கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக