2 ஏப்ரல், 2010

பெனசிர் படுகொலை குறித்து ஆப்கன் அதிபரிடம் விசாரிக்க பாகிஸ்தான் அதிபர் சர்தாரி கோரிக்கை




இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டது குறித்து ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் கண்டலீசா ரைஸ் உள்ளிட்ட நான்கு சர்வதேச தலைவர்களிடம் ஐ.நா., குழு விசாரணை நடத்த வேண்டும் என, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கோரியுள்ளார்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ, ஊழல் புகார் தொடர்பான கைது நடவடிக்கைக்கு பயந்து லண்டன் மற்றும் சவுதியில் தங்கியிருந்தார்.

பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 2007ம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்த போது ராவல்பிண்டியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.இஸ்லாமாபாத்திலிருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் அதிபர் சர்தாரி குறிப்பிடுகையில், 'எனது மனைவி பெனசிர் புட்டோ படுகொலை செய்யப்படுவதற்கு முன்னதாகவே, ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய், அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர் கண்டலீசா ரைஸ், ஐக்கிய அரபு எமிரேட்டின் புலனாய்வுத் தலைவர், சவுதி அரேபிய புலனாய்வுத் தலைவர் ஆகியோர் பெனசிரின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறியுள்ளனர்.

இந்த விஷயம் அவர்களுக்கு எப்படி தெரிந்தது என்பதை, பெனசிர் படுகொலை குறித்து விசாரிக்கும் ஐ.நா., குழு அவர்களிடம் விசாரிக்க வேண்டும்' என்றார்.சிலி நாட்டுக்கான ஐ.நா., தூதர் ஹெரால்டோ முனோஸ் தலைமையிலான மூவர் குழு பெனசிர் கொலையை விசாரித்தது. தற்போது விசாரணை முடிந்த நிலையில் அறிக்கையை ஐ.நா., பொதுச் செயலர் பான்-கி-மூனிடம் இந்த குழு ஒப்படைக்க உள்ளது.இந்த சமயத்தில் சர்தாரி, மேற்கண்ட நான்கு தலைவர்களிடம் விசாரிக்க கோரியுள்ளார். விசாரணைகள் அனைத்தும் முடிந்து விட்டதாக இந்த மூவர் குழு தெரிவித்துள்ளது.இந்த குழுவினர் நினைத்தால் கர்சாய் உள்ளிட்ட நான்கு தலைவர்களிடம் விசாரிக்கலாம். இதன் மூலம் இந்த கமிஷன் பெனசிர் கொலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்வது தாமதமாகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக