2 ஏப்ரல், 2010

யாழ். ஐ.ம.சு.மு பிரசார கூட்டத்தில் மக்கள் திரள்:

நல்லூர் கந்தசுவாமி கோயிலில் ஜனாதிபதி வழிபாடு; நூலகத்தையும் பார்வையிட்டார்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கு நேற்று மக்கள் வெள்ளத்தில் நிறைந்திருந்ததுடன் இரண்டு பாரிய மேடைகள் அமைக்கப்பட்டு அப்பிரதேசமெங்கும் தேசிய மற்றும் கட்சிகளின் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஏற்பாடு செய்திருந்த இம் மாபெரும் பிரசாரக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலய முன்றலில் ஈ. பி. டி. பியின் செயலாளர் நாயமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மலர் மாலை சூடி வரவேற்றார்.

அதனையடுத்து நல்லூர்க் கந்தனைத் தரிசித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ். பொது நூலகத்திற்குச் சென்று அதன் செயற்பாடுகளை நேரில் பார்வையிட்டபின் தேர்தல் பிரசார மேடைக்கு வருகை தந்தார்.

‘இலங்கையை ஆசியாவின் அதிசயமாக்குவோம்’ என்ற தொனியில் நடைபெற்ற இப்பிரசாரக் கூட்டத்தில் யாழ். மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதுடன் மும்மதங்களையும் சார்ந்த மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், வேட்பாளர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

‘யாழ்ப்பாணத்தை வளமாக்குவோம்’, ‘முப்பது ஆண்டுகளுக்குப் பின் மலர்ந்த மகிழ்ச்சியை முழுமையாக்குவோம்’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளும் சுவரொட்டிகளும் பிரசார மேடையை அண்டிய பிரதேசத்தில் தொங்கவிடப்பட்டிருந்தன.

யாழ். மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் இம்முறை 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஈ. பி. டி. பி கட்சி வேட்பாளர்கள் ஏழு பேரும் முஸ்லிம் வேட்பாளர்களும் அடங்குகின்றனர்.

நேற்றைய இப்பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய வேட்பாளர்கள், 30 வருட காலத்திற்குப் பின் யாழ். மாவட்ட மக்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை வியந்து பேசினர். இன்றைய இந்த சுதந்திர சூழலுக்கு வழிவகுத்த ஜனாதிபதியை அவர்கள் மனமார வாழ்த்தினர். எதிர்ப்பு அரசியலை விட்டு இணைந்த அரசியலில் கலந்து மக்களுக்குச் சேவை செய்வோம் என்ற தொனியில் அவர்களின் உரைகள் அமைந்திருந்தன.

அத்துடன் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது, இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தல், தமிழ் – முஸ்லிம் உறவுகளை வலுப்படச் செய்தல் போன்றவற்றில் தமது முழுக் கவனத்தையும் செலுத்தவுள்ளதாகத் தெரிவித்தனர்.

யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்க வேண்டுமென மக்களைக் கேட்டுக் கொண்ட வாக்காளர்கள், வாக்கு எனும் தீக்குச்சியை வசந்த ஒளியேற்றுவதற்காக உபயோகிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டனர்.

இப்பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழில் உரையாற்றியதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற இத் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலரும் விமான மூலம் அழைத்துவரப்பட்டிருந்தனர்.

யாழ். மாவட்டத்தில் சேவையிலுள்ள அரச உத்தியோகத்தர்கள் பெருமளவில் கலந்துகொண்ட இக் கூட்டத்தில் யாழ். மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா வட மாகாண ஆளுனர் ஜீ. ஏ. சந்திரசிறி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக