1 மார்ச், 2010

சமையல் எரிவாயு மீதான சகல வரிகளும் நீக்கம்
விலை அதிகரிப்பதைத் தடுக்க ஜனாதிபதி அவசர நடவடிக்கை


உலகச் சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதும் விலையதி கரிப்பின்றி நடைமுறை விலையிலேயே மக்களுக்கு தொடர்ந்தும் அதனை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

செல், லாஃப், எரிவாயு நிறுவனங்கள் மார்ச் முதலாம் திகதி முதல் விலையதிகரிப்பைக் கோரியிருந்த போதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய சமையல் எரிவாயுக்கான சகல வரிகளும் நீக்கப்பட்டு விலையதிகரிப்பைத் தவிர்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இதுபற்றி விளக்கிய அமைச்சர்; நடைமுறை விலை மேலும் இரண்டு மாதங்களுக்குத் தொடருமெனவும் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படு மெனவும் தெரிவித்தார்.

சமையல் எரிவாயுவின் விலை மாற்றம் தொடர்பில் வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சு ஒழுங்கு செய்திருந்த விசேட செய்தியாளர் மாநாடு நேற்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ரூமி மல்சூக் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இம்மாநாட்டில் அமைச்சர் தொடர்ந்து விளங்குக்கையில்:-

கடந்த 2009 நவம்பர் மாதம் முதல் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு ஷெல், லாஃப் எரிவாயு நிறுவனங்கள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் அனுமதி கோரியிருந்தன. எனினும் அச்சபையானது அதற்கான அனுமதியை வழங்க மறுத்துவிட்டது.

தற்போது உலகச் சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதால் மார்ச் முதலாம் திகதி முதல் இந்நிறுவனங் கள் விலையதிகரிப்புக்கான வேண்டுகோளை மீண்டும் முன்வைத்தன. இதன்படி ஷெல் சமையல் எரிவாயுவின் விலை 224 ரூபாவாலும், லாஃப் சமையல் எரிவாயுவின் விரை 198 ரூபாவாலும் அதிகரிப்பு செய்யப்படவிருந்தன.

இவ்விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு மேற்படி எரிவாயு நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளை வழங்கி மக்கள் மீது ஏற்படவிருந்த சுமைகளை இலகுவாக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி எரிவாயுவுக்கான சகல வரிகளும் நீக்கப்பட்டுள்ளன.

நடைமுறையில் ஷெல் எரிவாயு சிலிண்டரொன்று 1550 ரூபாவாகவும் லாஃப் எரிவாயு சிலிண்டரொன்று 1422 ரூபாவாகவும் விற்பனையில் உள்ளன. அரசாங்கம் ஒருகிலோ சமையல் எரிவாயுவிற்கு 8 ரூபா 70 சதத்தை வரியாக அறவிட்டு வந்தது.

ஷெல் எரிவாயு நிறுவனமானது கடந்த நவம்பர் மாதத்தில் 195 ரூபாவாலும் 2010 ஜனவரியில் 180 ரூபாவாலும் விலையதி கரிப்புச் செய்வதற்கான அனுமதியினைக் கோரியிருந்தது. அத்துடன் மார்ச் முதலாம் திகதி முதல் 220 ரூபாவால் எரிவாயுவின் விலையினை அதிகரிக்கவும் அனுமதி கோரியிருந்தது.

எனினும் அரசாங்கம் கடந்த ஆறுமாத காலங்களில் எரிவாயு நிறுவனங் களுக்கு வரிச்சலுகைகளை வழங்கி விலையதிகரிப்பைத் தவரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் இந்த ஆறுமாத காலத்திலும் நிலையான விலையொன்றைத் தக்கவைப்பதற்கும் வழிவகை செய்தது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை, நாட்டில் தற்போது அரிசி, மரக்கறி மற்றும் மீனின் விலை குறைந்து வருகின்றன எனக் குறிப்பிட்ட அமைச்சர்; வடக்கிலிருந்தும் பொருட்கள் வருவதால் எதிர்வரும் வாரங்களில் விலை மேலும் குறைவடையுமெனவும் தெரிவித்தார்.

இதேவேளை, தொடர்ச்சியாகத் தமது விலையதிகரிபுக்கான வேண்டுகோளுக்கு அதிகார சபை அங்கீகாரமளிக்காத காரண த்தால் ஷெல் எரிவாயு நிறுவனம் அரசா ங்கத்திடம் 1.4 பில்லியன் ரூபாவை நட்டஈடாகக் கோரியுள்ளது. இது தொடர் பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வருவதுடன் எதிர்வரும் 26ம் திகதி இது தொடர்பில் விளக்கமளிக்கவுமுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக