1 மார்ச், 2010

எவரிலும் தங்கியிராத வலுவான ஆட்சியை ஏற்படுத்துவதே எமது இலக்கு

ஐ.ம.சு.மு. வேட்பாளர்களின் உறுதிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி
தாயகத்துக்கு எதிரான சக்திகளின் ஆதரவு எமக்கு தேவையில்லை
ஐ.தே.க.போல் இராஜினாமா கடிதங்களை பெறுவது எமது கொள்கை அல்ல

(அனுராதபுரத்திலிருந்து மர்லின் மரிக்கார்)

பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஐ. தே. மு. அபேட்சகர்களிடம் ஐ. தே. க. தலைவர் திகதியிடப்படாத இராஜினாமாக் கடிதங்களைப் பெற்றிருப்பது போல் நாம் ஒரு போதும் பெறமாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் அனுராதபுரத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் சகல அபேட்சகர்கள் மீதும் எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. அவர்களைப் போன்று திகதியிடப் படாத இராஜினாமாக் கடிதங்களைப் பெறுவது எமது கொள்கையுமல்ல என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

நாம் சொல்லுவதை செய்பவர்கள். செய்வதையே சொல்லுபவர்கள். அதனால் நிறைவேற்ற முடியாத விடயங்களைக் கூறி மக்களுக்குப் பொய் வாக்குறுதிகளை வழங்காதீர்கள் என்றும் ஜனாதிபதி கூறினார். உண்மையைப் பேசி எம்மால் வெற்றி பெற முடியும். அதனால், மக்கள் மத்தியில் செல்லுங்கள். அவர்களது கருத்துகளுக்கும் செவி தாழ்த்துங்கள். உங்களது கருத்துகளை மாத்திரம் மக்கள் மீது திணிக்க முயற்சி செய்யாதீர்கள் என்றும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

விருப்பு வாக்குக்காக சண்டை, சச்சரவுகளில் ஈடுபடாதீர்கள். கட்சியின் ஒழுக்க நெறியைப் பேணி நடவுங்கள். மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் அபேட்சகர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று முன்தினம் மாலையில் உறுதிப்பிரமாணம் தெரிவித்தனர். இவ் வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த உறுதிப்பிரமாணத்தை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் வாசித்தார்.

அனுராதபுரத்திலுள்ள ஜனாதிபதி வாசஸ்தலத்தில் நடைபெற்ற இவ் வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், 1994 ம் ஆண்டு முதல் நாம் மக்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் பெற்றிருப்பவர்கள். 2001 முதல் 2004 வரையிலான காலப் பகுதியில் பாராளுமன்ற அதிகாரம் எம்மிடம் இல்லாத போதும் ஜனாதிபதி பதவி எமது கட்சியிடமே இருந்தது.

1994 ம் ஆண்டு முதல் நாம் ஜனாதிபதி, பாராளுமன்றம், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளின் அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றோம். இக் காலப் பகுதியில் நாம் நிறைவேற்றியுள்ள மக்களின் தேவைகளை ஒரு தரம் பின்நோக்கி பார்ப்பது அவசியம்.

நாம் ஜனநாயகத்தில் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளோம். ஜனநாயகத்திற்கு மாற்றமான வேறு வழிகளை நாம் நாடவில்லை. கடந்த கால ஆட்சியாளர்களைப் போன்று பாராளுமன்றத்தை ஒத்தி வைக்கவுமில்லை. சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவுமில்லை. தேர்தலையும் ஒத்தி வைக்கவில்லை. தேர்தல்களை உரிய நேர காலத்தில் நடத்துபவர்களே நாம். ஜனாதிபதி தேர்தலைக் கூட உரிய காலத்தை விடவும் இரு வருடங்களுக்கு முன்னர் நடத்தினோம்.

எவரிலும் தங்கியிராத வலுவான ஆட்சியை அமைப்பதே எமது இலக்காகும். அதனால் தாயகத்திற்கு எதிரான சக்திகளின் ஆதரவு எமக்குத் தேவை இல்லை. எம்மோடு பல அரசியல் கட்சிகள் இணைந்துள்ளன. வெவ்வேறு விதமான அபிப்பிராயங்களைக் கொண்டவர்கள் எம்முடன் இணைந்திருக்கின்றார்கள். இவர்கள் எவரும் டொலர்களுக்காகவோ, பணத்திற்காகவோ, எம்முடன் இணைந்திருப்பவர்கள் அல்லர். மாறாக நாட்டைப் பாதுகாப்பதற்காகவும், நாட்டை அபிவிருத்தி செய்யவுமே இவர்கள் எம்முடன் இணைந்துள்ளார்கள். இவர்கள் தாயகத்தின் மீது அன்பு, ஆதரவு வைத்திருப்பவர்கள்.

இம்முறை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பருத்தித்துறை முதல் தெய்வேந்திரமுனை வரையான சகல பிரதேசங்களிலும் போட்டியிடுகின்றது. எமக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வாக்கு கேட்க முடியும். அதற்கான உரிமை எமக்குள்ளது. நாம் நாட்டு மக்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தவர்கள். மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியவர்களும் நாமே.

நீங்கள் நிச்சயம் வெற்றி பெறும் குழுவின் ஆபேட்சகர்களாவீர்கள். இதனை எப்போதும் நினைவில் வைத்தபடி உங்களது செயற்பாடுகளை அமைத்துக்கொள்ளுங்கள். அதனால் மக்களுக்கு பொய் வாக்குகளை வழங்காதீர்கள். நிறைவேற்ற முடியாத விடயங்களைக் கூறாதீர்கள்.

நாம் உண்மையை பேசி வெற்றி பெற முடியும். எதிரணியினரைப் போன்று அதிகாரத்திற்காக பொய் வாக்குறுதி அளிப்பவர்கள் நாமல்லர் என்பதை நாட்டு மக்கள் அறிவர். மக்கள் எம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் மக்கள் மத்தியில் செல்லுங்கள். மக்களின் குரல் பாராளுமன்றத்திற்கு வர வேண்டும். மக்களின் ஆணையைப் பெற்று சொகுசாக வாழ முடியுமென கனவு காணாதீர்கள். மக்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதே எமது பொறுப்பு.

விருப்பு வாக்குக்காக சண்டை, சச்சரவுகளில் ஈடுபடாதீர்கள். இதனால் பாதிக்கப்படப் போவது எமது கட்சி ஆதரவாளர்ளும், அபிமானிகளுமே. அவர்கள் வெற்றிலைச் சின்னத்திற்கு வாக்களிப்பவர்களே. ஒவ்வொரு வரும் மூன்று வாக்குகளை அளிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக