1 மார்ச், 2010

50 வெளிநாட்டு கண்காணிப்பாளரை வரவழைக்க அனுமதி; 8000 பேருக்குபயிற்சி



பாராளுமன்றத் தேர்தலுக்கென ஆசிய நாடுகளில் இருந்து 50 தேர்தல் கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு வரவழைப்பதற்கு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க பெப்ரல் அமைப்புக்கு அனுமதி வழங்கியிருப்பதாக அதன் பணிப்பாளர் ரோஹண தினகரனுக்குத் தெரிவித்தார்.

அதற்கமைய தேர்தலுக்கு இரு வாரங்களுக்கு முன்னதாக எதிர்வரும் 25 ஆம் திகதியளவில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கையில் தமது பணிகளை ஆரம்பிப்பதற்கு ஏற்ற வகையில் அவர்களை வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இதேவேளை, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 8 ஆயிரம் உள்நாட்டு கண்காணிப்பாளர்களை நாடளாய ரீதியில் பணியில் அமர்த்த பெப்ரல் அமைப்பு தீர்மானித்துள்ளது. இவர்களுக்கான விசேட பயிற்சிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன குறிப்பிட்டார்.

தேர்தல் கண்காணிப்பு பணிகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பது தொடர்பாக பெப்ரல் அமைப்பின் முக்கிய அதிகாரிகள் தேர்தல்கள் ஆணையாளருடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இம்முறை பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து வாக்கு எண்ணுவதில் கலந்து கொள்வதற்கு பெப்ரல் அமைப்பு பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை தேர்தல்கள் ஆணையாளரிடம் முன்வைத்திருப்பதாகவும் பணிப்பாளர் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன், தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஏற்ற வகையில் தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குவது தொடர்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதனால் அடையாள அட்டையில்லாதவர்கள் கிராம சேவகர்களை தொடர்பு கொள்ளுமாறும் பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக