1 மார்ச், 2010

தமிழ் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு ஆபத்து





எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், இலங்கையின் தேர்தல் வரலாற்றில் அதிகளவு கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக அமைந்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக 836 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதுவே மாவட்டம் ஒன்றில் அதிகளவு வேட்பாளர்கள் களமிறங்கிய தேர்தலாகும்.

இங்கு 22 அரசியல் கட்சிகளும், 16 சுயேச்சைக் குழுக்களுமாக மொத்தம் 38 அணிகள் மோதுகின்றன. அம்பாறை மாவட்டம் அதிகளவு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் மோதும் மாவட்டமாக சாதனை படைத்துள்ளது. இங்கு 66 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன. இவற்றின் சார்பில் மொத்தம் 660 வேட்பாளர்கள் ஏழு ஆசனங்களுக்காகப் போட்டியிடுகின்றனர். அதே வேளை இந்தப் பொதுத் தேர்தலில் இலங்கை முழுவதும் 7265 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் அரசியல் கட்சிகள் சார்பிலும், 298 சுயேச்சைக் குழுக்கள் சார்பிலும் போட்டியில் நிறுத்தப்பட்டுள்ளனர். எனினும் இவர்களில் 196 பேர் மட்டுமே தேர்தல் மூலம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் குறிப்பாக திருகோணமலை, அம்பாறை போன்ற மாவட்டங்களில் அதிகளவில் அரசியல் கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுவதால் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அம்பாறையில் ஒரு தமிழ்ப் பிரதிநிதி தெரிவு செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் இருந்த போதும் அங்கு பெரும் எண்ணிக்கையான கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் போட்டியில் இறங்கியிருப்பதால் வாக்குகள் பிரிந்து தமிழர் பிரதிநிதித்துவம் பறி போகலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை கடந்த முறை திருகோணமலையில் இரு தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவான போதும் இம் முறை ஒருவர் கூடத் தெரிவாவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிக கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுவதாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாலும் திருகோணமலையில் ஒரு தமிழ்ப் பிரதிநிதியைப் பெறுவது கூட நெருக்கடியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மொத்தம் 31 ஆசனங்களுக்காக 1867 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 அரசியல்கட்சிகள், 12 சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 324 வேட்பாளர்க்ளும், வன்னி மாவட்டத்தில் 18 அரசியல்கட்சிகள், 9 சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 308 வேட்பாளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 அரசியல்கட்சிகள், 27 சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 360 வேட்பாளர்களும், திருகோணமலை மாவட்டத்தில் 17 அரசியல்கட்சிகள், 14 சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 217 வேட்பாளர்களும், அம்பாறை மாவட்டத்தில் 17 அரசியல்கட்சிகள் 49 சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 660 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக