3 மார்ச், 2010

செலாவணி கட்டுப்பாட்டை ரவி கருணாநாயக்க மீறினார
பிரதி செலாவணி கட்டுப்பாட்டாளர் நீதிமன்றில் தெரிவிப்பு


அமெரிக்க நெக்ஸியா நிறுவனத்திடமிருந்து ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சரான ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட கணக்குக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைத்ததாக பிரதி அந்நிய செலாவணி கட்டுப்பாட்டாளர் சிசிரகுமார பெரேரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சரான ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் தீபானி விஜேசுந்தர முன்னிலையில் சாட்சியம் அளித்தபோதே பிரதி அந்நிய செலாவணி கட்டுப்பாட்டாளர் இவ்வாறு தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான ஏழு கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு தான் ரவி கருணாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

கருணாநாயக்கவும் மற்றும் இருவரும் தங்களிடம் 3 மில்லியன் அமெரிக்க டாலர்களை வைத்திருந்தனர். இது அந்நிய செலாவணி கட்டுப்பாட்டு விதிகளை மீறும் செயலாகும். இந்த அளவு அந்நிய செலாவணியை ஒருவர் வைத்திருக்க வேண்டுமாயின் அதற்கான அனுமதியை இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து பெற்றுக்கொள்ளவேண்டும்.

குறிப்பிட்ட இந்த வெளிநாட்டு பணம் யூனியன் வங்கியில் பங்குகளை கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்தப்படவிருந்ததாக பிரதி அந்திய செலாவணி கட்டுப்பாட்டாளர் நீதிமன்றத்தில் மேலும் கூறினார்.

சிரேஷ்ட அரச சட்டத்தரணி குறுக்கு விசாரணை செய்தபோது, இரண்டாவது குற்றவாளியாக இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள லின்டன் பியசேனவின் வாக்கு மூலத்தின்படி ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சரான ரவி கருணாநாயக்க இந்த கொடுக்கல் வாங்கல் பற்றி நன்கு தெரிந்திருந்தார் என்று பிரதி கட்டுப்பாட்டாளர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக