2 ஏப்ரல், 2011

தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்பின் வலிமையை அனைவரும் ஏற்க வேண்டும்: சம்பந்தன்

தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்புகளுக்கு ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் அங்கீகாரம் வழங்கத் தவறியமையே வன்செயல்கள் மற்றும் ஆயுதப் போராட்டத்திற்கு காரணமாக அமைந்தது.

எனவே, இனியாவது தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்புக்கள் மதிக்கப்படுவதுடன் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி.யுமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நிலைத்து நிற்கக்கூடியதும் நியாயமானதுமான அரசியல் தீர்வை காண்பதற்கு தமிழ் மக்களும் தமிழ் அரசியல் சக்திகளும் ஐக்கியப்பட்டு திட மான உறுதியை எடுக்க வேண்டும்.

தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்பின் வலி மையினை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே சம்பந்தன் எம்.பி. இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடக்கு கிழக்கில் அண்மையில் தமிழ் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்ற உள்ளூராட்சி மன்றப் பிரதேசங்களில் நடத்தப்பட்ட தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக்கட்சி அதிகாரத்தைப் பெற்றுள்ளது. வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மை வலுவுடன் வாழ்கின்ற உள்ளூராட்சி பிரதேசங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக்கட்சி நம்பிக்கை தருகின்ற வெற்றியைப் பெற்றுள்ளது.

தமிழ் பேசும் மக்கள் தங்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும் வாழ்வதை உறுதிப்படுத்தும் ஆட்சி அதிகாரப்பகிர்வின் அடிப்படையிலும் அதன் மூலம் ஏனையோரின் கருணையில் தங்கியிருக்காமல் தங்களுடைய சொந்த முயற்சி ஊடாக தங்களின் சட்டபூர்வமான அரசியல், சமூக, பொருளாதார, கலாசார மற்றும் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதும் நிலைத்து நிற்கக் கூடியதும் நியாயமானதுமான அரசியல் தீர்வு ஒன்று தமிழ்ப் பிரச்சினைக்கு காணப்பட வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் குறிக்கோளுக்கு தொடர்ச்சியான ஆதரவை தெளிவாக தமிழ் மக்கள் இத்தேர்தல் மூலம் தந்துள்ளனர்.

ஏப்ரல் 2010 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளதுடன் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் நிலைத்து நிற்கக்கூடியதும் நியாயமானதுமான அரசியல் தீர்வு என்ற தமிழ் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை ஜயத்திற்கு இடமேயின்றி எடுத்துக்காட்டியுள்ளது.

ஜனநாயக ஆட்சி என்ற கொள்கையின் அடிப்படையின் கீழ் செயற்படுவதாகக் கூறிக் கொள்ளும் ஒரு நாட்டில் தமிழ் மக்களின் ஜனநாயகத் தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட வேண்டும். அரை நூற்றாண்டுக்கு மேலாக 1956 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் தேர்தல்களில் தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வந்துள்ள ஜனநாயகத் தீர்ப்புக்களின் இணைவாகவே தமிழ் மக்களின் இந்த ஜனநாயகத் தீர்ப்புக்கள் அமைகின்றன. வன்செயல்கள் மற்றும் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முதற் காரணம் 1956 இலிருந்து தமிழ் மக்களால் அளிக்கப்பட்டு வந்த ஜனநாயகத் தீர்ப்புக்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதற்கு தவறியதேயாகும்.ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

ஆனால் நாடு குறிப்பாக தமிழ் மக்கள் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியதாயிற்று. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் முடிவடைந்த யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் போராட்டத்தில் பங்குபற்றாத அப்பாவி தமிழ் மக்களே பெரும் எண்ணிக்கையில் பெரிய விலையைக் கொடுக்கவேண்டியதாயிற்று என்று பரவலாக நம்பப்படுகின்றது.

இவ்விடயம் தற்போது பகிரங்கமாகியுள்ளது. மீண்டும் எந்த விதமான வன்செயலிலும் ஈடுபடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. தமிழ் மக்களின் ஜனநாயகத் தீர்ப்புக்கள் தொடர்ச்சியாக மரியாதையற்ற முறையில் புறக்கணிக்கப்பட்டு மற்றும் அலட்சியப்படுத்தப்படுவது தமிழ் மக்களை அவர்களின் சம்மதம் இன்றியும் அவர்களின் சுதந்திரமான விருப்புக்களுக்கு எதிராகவும் ஆட்சியதிகாரத்தில் அவர்களுக்கு பங்கு வழங்காமலும் சர்வாதிகாரத்துடனும் அகம்பாவத்துடனும் தொடர்ந்து ஆளப்பட வேண்டும் என்பதையே வெளிப்படுத்தும், அவ்வாறாக, தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல், அடிப்படை மற்றும் மனித உரிமைகளை மீறும் சர்வாதிகார மற்றும் எதேச்சதிகாரமான ஆட்சி நிச்சயமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது என்றே நாம் நினைக்கின்றோம்.

ஏற்றுக் கொள்ளக்கூடியதும் நிலைத்து நிற்கக் கூடியதுமான நியாயமான அரசியல் தீர்வு ஒன்றைக் காணமுடியும் என்ற நம்பிக்கையுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் சார்பாக ஒரு செயற்பாட்டில் தற்போது ஈடுபட்டுள்ளது. அவ்வாறான ஏற்றுக் கொள்ளக்கூடியதும் நிலைத்து நிற்கக் கூடியதுமான நியாயமான அரசியல் தீர்வு ஒன்றைக் காணமுடியும் என்ற உறுதிப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளது. இந்த நோக்கத்தை அடைவதற்காக தமிழ் மக்களும் தமிழ் அரசியல் அமைப்பிற்குள் வருகின்ற அனைத்து அரசியல் சக்திகளும் ஐக்கியப்பட்டு திடமான உறுதியை எடுக்க வேண்டும்.

தமிழ் மக்கள் வழங்கிய ஜனநாயக தீர்ப்பின் வலிமை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். இப்பெறுபேறுகளை பெற்று சாதனை படைக்க பங்களிப்பு செய்த மக்கள் மற்றும் கட்சிப் பணியாளர்கள் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு எமது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களின் ஐக்கியத்தையும் ஒத்துழைப்பையும் வேண்டுகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக