2 ஏப்ரல், 2011

தெற்கு லண்டன் பகுதியில் துப்பாக்கிச் சூடு இலங்கை சிறுமியும் இளைஞனும் காயம்

தென் லண்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த 5 வயது சிறுமியொருவரும் 35 வயதுடைய இளைஞர் ஒருவரும் காயமடைந்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த துஷாரா கமலேஸ்வரன் என்ற சிறுமியும் ரொஷான் செல்வகுமார் என்ற இளைஞனுமே காயமடைந்தவர்களாவர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் 19 வயது இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது, தெற்கு லண்டன் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை குழுவொன்று மதுபானம் அருந்தும் கடையில் அமர்ந்து இங்கிலாந்துக்கும் கானாவுக்கும் இடையிலான கால்பந்துப் போட்டியை பார்த்து ரசித்துக்கொண்டிருந்துள்ளது.

அந்தச் சமயம் அங்கு மோட்டார் சைக்கிளில் மூவர் வந்துள்ளனர். இதனையடுத்து மதுபானக் கடையில் அமர்ந்திருந்த குழுவைச் சேர்ந்த 19 வயது இளைஞரொருவர் துப்பாக்கியையெடுத்து அலட்சியமாக சரமாரியாக சுட்டுள்ளார்.

இந்தத் திடீர் தாக்குதலில் இஸ்டாக் வெல் வுட் கடையில் நின்றுகொண்டிருந்த 5 வயது இலங்கைத் தமிழ் சிறுமி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். இதேபோல் அந்தக் கடையில் வேலைபார்க்கும் 35 வயது இலங்கை இளைஞரும் காயமடைந்தார். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான துஷாராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இளைஞனும் சிறுமியும் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காயமடைந்த சிறுமி துஷாரா தனது மாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வந்தபோதே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களை பிடிக்க உதவினால் 50 ஆயிரம் பவுண்ஸ் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று பிரிட்டனிலுள்ள கடைஉரிமையாளர்கள் பலர் அறிவித்துள்ளனர்.33 ஆயிரம் கடைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கடை உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் லோவ்மன் இதுதொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், இச்சம்பவத்துக்கு பொறுப்பானவரை கைதுசெய்வதற்கு பொலிஸாருக்கு உதவ நாம் விரும்புகின்றோம் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக