2 ஏப்ரல், 2011

கடற்படை வீரர்களைக் கண்டுபிடிப்பதற்கு இந்தியாவின் உதவியை நாடியுள்ளோம்: கடற்படை பேச்சாளர்



முல்லைத்தீவு கடற்பரப்பில் காணாமல் போன நான்கு கடற்படை வீரர்கள் தொடர்பில் எவ்விதமான தகவலும் இல்லை. எனவே, இவர்களை கண்டுபிடிக்க இந்தியாவின் உதவியை நாடியுள்ளோம் என்று கடற்படை பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணக்குலசூரிய தெரிவித்தார்.

காணாமல் போன கடற்படை வீரர் படகு எவ்விதமான சேதமும் இன்றி வெற்றிலைக்கேணி கரையோரத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடற்படை பேச்சாளர் இது தொடர்பாக தொடர்ந்தும் கூறுகையில் கடந்த 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு வடக்கு கடற்பரப்பில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த நான்கு கடற்படை வீரர்களும் மர்மமான முறையில் படகுடன் காணாமல் போயிருந்தனர்.

சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்களுக்கு பிறகு படகு மட்டும் வெற்றிலைக்கேணி கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவை அண்டிய கரையோரப் பிரதேசங்களில் விசாரணைகளிலும் தேடுதல் நடவடிக்கைகளிலும் படையினர் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு காணாமல் போயுள்ள நான்கு கடற்படை வீரர்களையும் கண்டுபிடிக்க இந்திய கடற்படையினரிடம் உதவி கோரப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக