11 பிப்ரவரி, 2011

எதிர்கால சந்ததியில் நம்பிக்கைவைத்தே கல்விக்கு கூடுதல் நிதி









இயற்கை அனர்த்தங்களினால் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் 11 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்ப 33 பில்லியன் ரூபா நிதி அவசியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துள்ளதுடன், பாதிப்புக்குள்ளான சகல மக்களினதும் இயல்பு வாழ்க்கையைத் தோற்றுவிப்ப தற்கான செயற்றிட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மத்துகம பிரதேச சபை மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் குமாரவெல்கம, பந்துல குணவர்தன, பிரதியமைச்சர் ரோஹித அபேகுணவர்தன உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் குமார வெல்கமவின் தனிப்பட்ட நிதியிலிருந்து 19,000 முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-

எமது எதிர்கால சந்ததியான பிள்ளைகள் மீது நம்பிக்கை வைத்தே நாம் கல்வித்துறைக்குப் பாரிய நிதியினை ஒதுக்கியுள்ளோம்.

பத்து லட்சம் பிள்ளைகளுக்கு பாடசாலை சீருடை 24 இலட்சம் பேருக்கு இலவச பாட நூல் என பெருமளவு நிதியை அரசாங்கம் வருடாந்தம் செலவிட்டு வருகிறது.

மூன்று இலட்சம் மாணவர்கள் முதலாம் வகுப்பில் இணைகின்றனர். இவர்களில் 2,80,000 பேர் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். இவர்களில் 23,000 பேரே பல்கலைக்கழகத்துக்குச் செல்கின்றனர். இத்தகைய போட்டித் தன்மையே எமது கல்வித்துறையில் நிலவுகிறது.

எனினும், பல்கலைக்குத் தெரிவானோரைத் தவிர்ந்த ஏனையவர்களை நாம் கைவிட்டு விடவில்லை. அவர்களையும் நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் நாம் உள்வாங்குகிறோம். நாட்டின் அபிவிருத்தியில் சகல பிரஜைகளுக்கும் பங்களிப்பும் பொறுப்பும் உள்ளது.

புத்தகக் கல்வியில் மட்டும் வெற்றி பெற்ற மனிதனாக முடியாது. பரீட்சைகளில் சித்தி அடைவதனாலும் எதிர்பார்க்கும் வளர்ச்சியை எட்டமுடியாது. கற்க வேண்டிய பல அனுபவ பாடங்கள் உள்ளன. பல்துறைகளிலும் அனுபவத்தை வளர்க்க வேண்டியுள்ளது.

பிள்ளைகளுக்கு டிஷசன், பரீட்சை என சுதந்திரமின்றி பெரும் சுமை சுமத்தப்படுகிறது. பிள்ளைகளுக்கான சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதில் பெற்றோர்களுக்குப் பாரிய பொறுப்புகள் உண்டு.

இது விடயத்தில் பெற்றோர் முன்னுதாரணமாக விளங்க வேண்டும். பாரிய பல பொறுப்புக்கள் எனக்குள்ள போதும் பிள்ளைகளுக்கான நேரத்தை ஒதுக்குவதில் நான் முன்னுதாரணமாகவுள்ளேன்.

எல்லாவற்றிற்கும் குறை கூறும் சில சக்திகள் இதனையும் ஆட்சியாளர்களின் குற்றம் என விமர்ச்சிக்கின்றமையை காண முடிகிறது. இது விடயத்தில் பெற்றோர் முன்னுதாரணமாக விளங்க வேண்டும். பாரிய பல பொறுப்புக்கள் எனக்குள்ள போதும் பிள்ளைகளுக்கான நேரத்தை ஒதுக்குவதில் நான் முன்னுதாரணமாகவுள்ளேன்.

நாம் தாய் நாட்டை மீட்டெடுத்து அபிவிருத்தியில் கட்டியெழுப்பும் சவாலை பாரமேற்றுள்ளோம். கடந்த 50 வருடங்களுக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட பல்வேறு பிரதேசங்களிலும் இயற்கை அனர்த்தங்கள் இடம் பெற்றுள்ளன.

எல்லாவற்றிற்கும் குறை கூறும் சில சக்திகள் இதனையும் ஆட்சியாளர்களின் குற்றம் என விமர்ச்சிக்கின்றனர்.

மழை பெய்தாலும் வெள்ளம் பெருக்கெடுத்தாலும் எம்மையே குறை கூறுகின்றனர்.

எவ்வாறாயினும் வெள்ளம், இயற்கை அனர்த்தங்களால் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை மீளக் கட்டியெழுப்புவதற்கு 33,000 பில்லியன் ரூபா தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களைக் கட்டியெழுப்பவும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கான சூழலை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கான பொறுப்பினை நாம் ஏற்றுள்ளோம்.

குறிப்பாக விவசாயத்துறையை மீளக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. தேயிலை, தென்னை, மரக்கறி உற்பத்தியாளர்களுக்கும் உரமானியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சில பொருட்களின் விலை அதிகரித்துக் காணப்பட்டாலும் மார்ச், ஏப்ரல் மாதமளவில் நெல், தேங்காய் போன்றவற்றின் விலைகள் குறைவடையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேயிலை, இறப்பருக்கான விலை ஒரு காலத்தில் வீழ்ச்சியடைந்திருந்தாலும் தற்போது அதற்கு சிறந்த விலை கிடைத்து வருகிறது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக