11 பிப்ரவரி, 2011

தென்கிழக்கு கடற்பரப்பில் தொடர்ந்தும் தாழமுக்கம்: வெள்ளம் வடிந்தாலும் மழை அறிகுறி; மலையகத்தில் மண்சரிவு அபாயம்






கனத்த மழை ஓய்ந்துள்ள போதிலும் தென்கிழக்கு கடற்பரப்பில் தொடர்ந்தும் தாழமுக்க நிலை காணப்படுவதாக வானிலை அவதான நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ். எச். காரியவசம் நேற்றுத் தெரிவித்தார்.

இந்த தாழமுக்கம் தற்போது பலவீனமடைந்திருந்தாலும் ஒரு வார காலத்திற்கும் மேலாக ஒரு இடத்திலேயே நிலை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அண்மையில் பெய்த கனத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்திருந்தவர்களில் 37 ஆயிரத்து 330 பேர் நேற்று சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பியதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி கூறினார்.

வெள்ள நீர் தொடர்ந்தும் வடிந்துவருவதையடுத்து நேற்று 123 முகாம்கள் மூடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கனத்த மழை ஓய்ந்துள்ள போதிலும் மலையகத்தின் சில பிரதேசங்களில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்படக் கூடிய முன்னறிகுறிகள் ஏற்பட்டிருப்பதாக தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பூகற்பவியலாளர் விஜேவிக்ரம தெரிவித்தார்.

மாத்தளை, யட்டவத்த பிரதேசத்தில் சுமார் 30 அடி உயரமான பாராங்கல் உருண்டு விழக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் அதனை உடைத்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ நிலைய மாத்தளை மாவட்ட அலுவலகம் கேட்டுக்கொண்டிருப்பதாக பூகற்பவியலாளர் மொரேமட கூறினார்.

கடந்த சில தினங்களாக கனத்த மழை ஓய்ந்திருந்த போதிலும் நாட்டிலுள்ள 39 பாரிய குளங்கள் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர்ந்தும் வழிந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வளப் பிரதிப் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன கூறினார்.

இதேவேளை குருநாகல், புத்தளம், பொலன்னறுவை, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலுள்ள குளங்களின் நீர் மட்டம் குறைந்து விட்டதாகவும் 15 குளங்களின் வான் கதவுகளும் திறந்து மேலதிக நீர் வெளியேற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக