11 பிப்ரவரி, 2011

பாதிப்பு பகுதிகளை கட்டியெழுப்ப 330 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு * 8 இலட்சம் மெ.தொ. நெல் உற்பத்தி பாதிப்பு * 20 ஆயிரம் வீடுகள் சேதம் ஜனாதிபதியின் யோசனைக




நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்ப 330 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இந்த யோசனைக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியது.

இந்த வருடம் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் இடம்பெற்ற அதிக மழை மற்றும் வெள்ளம் காரணமாக கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதுடன்; ஊவா, மத்திய மற்றும் வட மாகாணங்களில் பல மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன.

இந்த வெள்ளம் காரணமாக 3 இலட்சத்து 33 ஆயிரத்து 986 குடும்பங்களைச் சேர்ந்த 12 இலட்சத்து 49 ஆயிரத்து 533 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். அத்துடன் பல குடும்பங்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கான ஜீவனோபாயம் இல்லாமற்போனது.

2 இலட்சம் ஹெக்டயர் நெற் செய்கையும் 3 இலட்சம் ஹெக்டயர் இதர பயிர்ச் செய்கையும் முழுமையாக அல்லது பெரும் பகுதி பாதிக்கப்பட்டதுடன் சுமார் 500 சிறிய வாவிகள் சேதமுற்றன.

இதன் காரணமாக சுமார் 8 இலட்சம் மெட்ரிக் தொன் நெல் உற்பத்தி இல்லாமற்போயுள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது.

இது தவிர 20 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. வெள்ளத்தினால் அழிந்து போன நெல் மற்றும் மரக்கறிச் செய்கையை மீண்டும் பழைய நிலைக்கு இட்டுச் செல்வது தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. நெற்செய்கைக்காக உர மானியம் வழங்குவதுடன் விவசாயிகளுக்கு விதை நெல்லை இலவசமாக பெற்றுத்தருவதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்திருந்தது.

அத்துடன் தேசிய உணவு உற்பத்தியை துரிதப்படுத்தும் நோக்கில் பழங்கள் மற்றும் மரக்கறி விவசாயிகளுக்கு உர மானியம் முறையொன்றை பெற்றுத்தரவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தெங்கு செய்கைக்கு வழங்கப்படும் உர மானியத்தை போன்று இடம்பெறும் இந்த உரத்தை சலுகை விலையில் சந்தையில் கொள்வனவு செய்யும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

மனித உயிர்களுக்கும் காணி மற்றும் வயல்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு புறம்பாக விலங்கு பண்ணைகளுக்கு பாரிய அழிவுகள் இடம்பெற்றுள்ளன.

அதிக மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் மட்டும் பசு மாடுகள், எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் என 2 இலட்சத்து மூவாயிரத்து 75 கால்நடைகளும் 3 இலட்சத்து 19 ஆயிரத்து 250 கோழிகளும் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. இதனால் ஏற்பட்ட நட்டம் 1922 மில்லியன் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.

மனித உயிர்கள், காணி, விலங்குப் பண்ணைகள் மற்றும் நெல் உள்ளிட்ட பயிர்ச் செய்கை ஆகியவற்றுக்கு ஏற்பட்ட இந்த பாரிய இழப்பை ஈடுசெய்து மீண்டும் பழைய நிலைக்கு இட்டுச் செல்வதற்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கவும் அதனை செயற்படுத்தவும், கண்காணிப்பினை மேற்கொள்ளவும் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் செயலணிப்படையொன்று அமைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அமைச்சரவை அமைச்சர்களின் பங்களிப்புடன் முறையான வேலைத் திட்டத்தின் மூலம் இந்த செயற்பாடுகள் ஒருங்கிணைக்கபடவுள்ளன.

இழந்துபோன மனித உயிர்கள் தவிர்ந்த வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான ஏனைய காணி மற்றும் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட அனைத்து இழப்புகளையும் பழைய நிலைக்கு இட்டுச் செல்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு பெற்றுத் தர ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக