5 பிப்ரவரி, 2011

ஐ.தே.க. வின் ஆர்ப்பாட்டத்தின் மீது சரமாரி தாக்குதல்: ஊடகவியலாளர்கள் படுகாயம்

இலங்கையின் 63 ஆவது சுதந்திர தினமான நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஐக்கிய தேசியக் கட்சியினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திரத்துக்கான குரல் எனும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது இனந்தெரியாத குழுவொன்றினால் சரமாரியான தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் ஆர்ப்பாட்டக்காரர்களான ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர்களும் படுகாயமடைந்துள்ள அதேவேளை அக்கட்சி எம்.பி.க்களது வாகனங்களும் கடுமையான சேதத்துக்குள்ளாகியுள்ளன.

இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கமே திட்டமிட்டவகையில் இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரியும் ஜனநாயகத்தை வலியுறுத்தியும் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்படி ஆர்ப்பாட்டம் சின்ன பொரளை சந்தியில் நேற்று மாலை 7.00 மணியளவில் ஆரம்பமானது. இதில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் என சகலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டம் ஆரம்பமான சில நிமிடங்களில் அவ்விடத்துக்கு திடீரென வந்த இனந்தெரியாத குழுவினர்ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சரமாரியான தாக்குதலை நடத்தினர். தாக்குதலை நடத்துவதற்காக அங்கு குவிந்திருந்த அனைவரது கைகளிலும் பொல்லுகள் இருந்ததாக கூறப்படுகிறது. அவற்றின் மூலமும் கற்களாலும் அவர்கள் தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் நாலா பக்கமும் சிதறி ஓடினர். இதனையடுத்து சின்ன பொரளை பிரதேசத்தில் பதற்றம் நிலவியது.

இதேவேளை செய்தி சேகரிப்பதற்காக அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள் மீதும் இக்குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதனால் சில ஊடகவியலாளர்கள் படுகாயங்களுக்கு உள்ளாகினர். தினக்குரல் பத்திரிகையின் புகைப்படப்பிடிப்பாளர் எஸ். கிர்ஷான் காயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ரவி கருணாநாயக்க எம்.பி. யின் சாரதி உட்பட மேலும் பலரும் படுகாயமடைந்துள்ளனர்.

சிரச ஊடக நிறுவனத்தின் வீடியோ கெமரா, தாக்குதல் நடத்தியவர்களால் பலவந்தமாக பறித்துச் செல்லப்பட்டது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, எம்.பி. க்களான தயாசிறி ஜயசேகர, ரவி கருணாநாயக்க, ரோசி சேனாநாயக்க உள்ளிட்டோரின் வாகனங்கள் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.இது இவ்வாறிருக்க மேலும் சில ஊடகவியலாளர்கள் குறித்த இடத்துக்கு செல்லவிடாது தடுக்கப்பட்ட அதேவேளை அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

செய்வதறியாத பொலிஸார்

ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது இனந்தெரியாத குழுவினால் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பதற்ற நிலைமை ஏற்பட்ட அதேவேளை அங்கு என்ன நடைபெறுகிறது என்பதை உடனடியாக புரிந்துகொள்ள முடியாத பொலிஸார் செய்வதறியாது அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.

எனினும் அவர்களால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. அது மட்டுமல்லாது இரவு நேரம் என்பதால் அங்கு நடைபெறுவது என்னவென்பதை உடனடியாக உணர்ந்து கொள்ள முடியாத நிலைமை சகலருக்கும் ஏற்பட்டிருந்தது.

இதேவேளை, ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு போதியளவில் பாதுகாப்பு கொடுக்கப்படவில்லையென்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாமல் பக்கச்சார்பாக நடந்து கொண்டதாகவும் பொலிஸாரை விமர்சித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்குவாதத்திலும் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டனர்.

எவ்வாறிருப்பினும் சிறிது நேரத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதேநேரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாம் கைகளில் ஏந்தியிருந்த தீப்பந்தங்களை வீதியில் போட்டு எரித்தனர். அத்துடன் அரசாங்கத்துக்கும் பொலிஸாருக்கும் எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

இந்த தாக்குதலின் பின்னணியில் அரசாங்கமே இருந்து செயற்பட்டிருப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலமாக கோஷமிட்டதை அவதானிக்க முடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக